அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நிகழ்ந்த ஒரு கோரமான சிறிய ரக விமான விபத்தில், அதில் பயணம் செய்த 5 பிக்கிள்பால் (Pickleball) வீரர்கள் உயிரிழந்த சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸின் அமரில்லோ கிளப்பைச் சேர்ந்த இந்த வீரர்கள், நியூ பிரான்ஃபெல்ஸ் நகரில் நடைபெறவிருந்த ஒரு முக்கியப் போட்டியில் பங்கேற்பதற்காகச் சென்றபோது இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது. ஆஸ்டின் நகருக்கு தென்மேற்கே உள்ள விம்பர்லி அருகே அவர்கள் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது.

வியாழக்கிழமை இரவு சுமார் 11 மணியளவில், இவர்கள் பயணம் செய்த விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தனது கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படுகிறது. மலைப்பாங்கான பகுதியில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில், விமானத்தில் இருந்த வீரர்கள் 4 பேர் மற்றும் விமானி என மொத்தம் 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து நடந்த இடம் ஆஸ்டினிலிருந்து சுமார் 64 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாக டெக்சாஸ் பொதுப் பாதுகாப்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

விபத்து குறித்து தகவலறிந்ததும் மீட்புப் படையினர் விரைந்து சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், விமானம் முற்றிலும் நொறுங்கியதால் ஒருவரைக் கூட காப்பாற்ற முடியவில்லை. இச்சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு நடைபெறவிருந்த பிக்கிள்பால் போட்டிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்பக் கோளாறுக்கான துல்லியமான காரணம் என்ன என்பது குறித்து அமெரிக்க விமான போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே கிளப்பைச் சேர்ந்த இளம் வீரர்கள் உயிரிழந்தது அவர்களது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version