வடகிழக்கு தாய்லாந்தில் கட்டுமானத்தில் உள்ள அதிவேக ரயில் திட்டத்திற்கு சொந்தமான கிரேன் ரயில் மீது விழுந்த விபத்தில் 22 பேர் பலியாகினர் மற்றும் சுமார் 80 பேர் காயமடைந்தனர்.
வடகிழக்கு தாய்லாந்தில் இன்று காலை நடந்த ஒரு கோரமான ரயில் விபத்து நாடு முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த விபத்து தலைநகர் பாங்காக்கிலிருந்து வடகிழக்கே சுமார் 230 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நக்கோன் ராட்சசிமா மாகாணத்தின் சிக்கியோ மாவட்டத்தில் நிகழ்ந்தது. அந்த ரயில் பாங்காக்கிலிருந்து உபோன் ராட்சதானி மாகாணத்திற்குச் சென்று கொண்டிருந்தது.
அப்போது, கட்டுமானத்தில் இருந்த அதிவேக ரயில் திட்டத்தி பயனபடுத்தப்பட்ட கிரேன், பயணிகள் ரயிலின் மூன்று பெட்டிகள் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து, அந்த ரயில் தடம் புரண்ட துயரச் சம்பவத்தில் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் சுமார் 80 பயணிகள் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, சில உடல்கள் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது, மேலும் அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்தன.
இதுவரை 19 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் சில உடல்கள் இன்னும் ரயில் பெட்டிகளுக்குள் சிக்கியுள்ளதாகவும் உள்ளூர் காவல்துறை அதிகாரி கர்னல் தாச்சபோன் சின்னாவுங் தெரிவித்தார். நிலைமை மிகவும் அபாயகரமானதாக இருப்பதால், கிரேன்கள் கவிழ்ந்துவிடும் அபாயத்தின் காரணமாக மீட்புக் குழுக்கள் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மீட்புக் குழுக்கள் கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி இடிபாடுகளை அகற்ற முயற்சித்து வருகின்றன, ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்படுகின்றன.
