ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் பெய்து வரும் மிகக் கடுமையான கனமழை மற்றும் அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இந்த இயற்கை சீற்றத்தில் இதுவரை குறைந்தது 107 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை நிலச்சரிவில் சிக்கிய 57 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவில் சிக்கி காயமடைந்தவர்களுக்கும், வீடுகளை இழந்து இடம்பெயர்ந்தவர்களுக்கும் உடனடி மருத்துவ உதவி, உணவு மற்றும் தங்குமிட வசதிகளை அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகள் வழங்கி வருகின்றன. இன்னும் பலர் மண்ணுக்குள் புதையுண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.எத்தியோப்பியாவில் இத்தகைய நிலச்சரிவு சம்பவங்கள் தொடர்கதையாகி வருவது அந்நாட்டு மக்களைப் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
