ஆப்பிள் நிறுவனத்தில் கடந்த 15 ஆண்டுகளாக வெற்றிகரமான தலைமைத்துவத்தை வழங்கி வந்த டிம் குக், வரும் செப்டம்பர் 2026-ல் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) பதவியிலிருந்து விலகுகிறார். ஸ்டீவ் ஜாப்ஸின் மறைவுக்குப் பிறகு, 400 பில்லியன் டாலராக இருந்த நிறுவனத்தின் மதிப்பை 4 டிரில்லியன் டாலராக உயர்த்தி, ஆப்பிளை உலகளாவிய சக்தியாக மாற்றிய பெருமை இவருக்கு உண்டு. வயது முதிர்வு மற்றும் சமீபத்திய சந்தை சவால்களைக் கருத்தில் கொண்டு அவர் இப்பதவியிலிருந்து விலகினாலும், நிறுவனத்தின் ‘எக்ஸிக்யூட்டிவ் சேர்மேன்’ என்ற புதிய பொறுப்பை ஏற்றுத் தொடர்ந்து வழிகாட்ட உள்ளார்.
டிம் குக்கிற்குப் பிறகு, ஆப்பிள் நிறுவனத்தின் புதிய சிஇஓ-வாக அதன் வன்பொருள் பொறியியல் பிரிவின் தலைவரான ஜான் டெர்னஸ் (John Ternus) வரும் செப்டம்பர் 1-ம் தேதி பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 50 வயதான ஜான் டெர்னஸ், ஆப்பிள் நிறுவனத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருபவர். ஐபோன், மேக் மற்றும் விஷன் ப்ரோ போன்ற நிறுவனத்தின் அடையாளமாகத் திகழும் தயாரிப்புகளை உருவாக்கியதில் இவருக்கு முக்கியப் பங்குண்டு. ஒரு இந்தியர் சிஇஓ-வாக நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய சூழலில், நிறுவனத்தின் கொள்கைகளையும் கலாச்சாரத்தையும் முழுமையாக அறிந்த ஒரு சீனியர் அதிகாரியான ஜான் டெர்னஸை நிர்வாகம் தேர்வு செய்துள்ளது.
தற்போது ஆப்பிள் நிறுவனம் சீன சந்தையில் பின்னடைவு, உற்பத்தி மையங்களை இந்தியாவுக்கு மாற்றுவதில் உள்ள சவால்கள் மற்றும் ஏஐ (AI) தொழில்நுட்பத்தில் நிலவும் போட்டிகள் எனப் பல்வேறு அழுத்தங்களை எதிர்கொண்டு வருகிறது. இந்த இக்கட்டான நிலையில், நிர்வாக மாற்றத்தால் எவ்வித தொய்வும் ஏற்படாமல் இருக்கத் திட்டமிட்டுள்ள ஆப்பிள், டிம் குக் மற்றும் ஜான் டெர்னஸ் கூட்டணியின் மூலம் நிலைத்தன்மையை உறுதி செய்ய முயல்கிறது. எளிமை மற்றும் தரம் சார்ந்த ஆப்பிளின் அடிப்படை திட்டங்களை ஜான் டெர்னஸ் தொடர்ந்து முன்னெடுப்பார் எனத் தனது விடைபெறும் செய்தியில் டிம் குக் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
