அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது குழுவினர் சமீபத்தில் சீனாவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டனர். இந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையின் போது, அமெரிக்க குழுவினரையும், குறிப்பாக பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கையும் சீனா உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஹோட்டல் ஊழியர்கள் போல ராணுவ வீரர்களை மாறுவேடத்தில் அமர்த்தி சீனா இந்த உளவு வேலையை பார்த்ததாக பெய்ஜிங் மீது புகார்கள் எழுந்துள்ளன.
ஜெனிபர் ஜெங் (Jennifer Zeng) என்ற சமூக ஊடக பயனர் இது குறித்து அடுக்கடுக்கான புகார்களைப் பகிர்ந்துள்ளார். பெய்ஜிங்கில் நடைபெற்ற அரசு விருந்தின் போது, எலான் மஸ்க்கிற்கு பின்னால் நின்ற பெண் ஊழியர் உண்மையில் ஒரு சாதாரண ஹோட்டல் ஊழியர் அல்ல என்றும், அவர் சீன ராணுவத்தின் உயர் பதவியில் இருக்கும் ஒரு அதிகாரி என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
அதாவது, அந்தப் பெண்ணின் பெயர் Cheng Cheng. அவர் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர். சீன ராணுவத்தின் ‘ஹானர் கார்டு செரிமோனியல் பிரிகேட்’ பிரிவில் ‘மேஜர்’ அந்தஸ்தில் இருக்கும் பட்டாலியன் கமாண்டர். சீனாவின் முதல் பெண் ஹானர் கார்டுகளில் ஒருவரான இவர், ராணுவத்தில் ‘ஃபர்ஸ்ட்-கிளாஸ் மெரிட்’ உள்ளிட்ட பல உயரிய விருதுகளைப் பெற்றவர். அந்தப் பெண் அணிந்திருந்த சிவப்பு நிற உடைக்கு அடியில் துப்பாக்கி போன்ற ஏதோ ஒரு ஆயுதத்தை மறைத்து வைத்திருந்திருக்கலாம்” என்றும் ஜெனிபர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
ஜெனிபர் ஜெங் இது போன்ற உளவு மற்றும் சதி குற்றச்சாட்டுகளைக் கூறுவது இது முதல் முறையல்ல. கடந்த 2023-ஆம் ஆண்டில், கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதன் பின்னணியில் சீன கம்யூனிஸ்ட் கட்சி இருப்பதாகக் கூறியிருந்தார். இந்தியாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே மோதலை உருவாக்குவதற்காக சீனா இதைச் செய்தது என்பது அவரது அப்போதைய குற்றச்சாட்டாகும்.
ஜெனிபர் ஜெங் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் சீன சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் போதிலும், இந்த உளவு குற்றச்சாட்டுகள் அதிகாரப்பூர்வமாக இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சீன அரசு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கவில்லை.
