இளம் பருவத்தினரின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், 16 வயதிற்குட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் அதிரடிச் சட்டத்தைக் கனடா அரசு கொண்டு வந்துள்ளது.

உலகளவில் பதின்ம வயதினர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், கனடா இம்முடிவை எடுத்துள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, பிரேசில் மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் 16 வயதிற்குட்பட்டவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளக் கணக்குகளை வைத்திருக்கத் தடை விதித்துள்ளன. இதேபோன்று பிரான்ஸ், டென்மார்க் மற்றும் போலந்து ஆகிய நாடுகளும் இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகின்றன.

இந்த வரிசையில் தற்போது இணைந்துள்ள கனடா அரசு, ‘டிஜிட்டல் பாதுகாப்பு சட்டம்’ (Digital Safety Act) என்ற புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இச்சட்டத்தின்படி, 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் யாரும் சமூக ஊடகங்களில் கணக்குகள் வைத்துக்கொள்ள அனுமதி இல்லை.

குறிப்பாக, சிறார்களின் அனுமதியின்றி எடுக்கப்படும் அவர்களின் அந்தரங்கப் புகைப்படங்கள் இணையத்தில் பரப்பப்படுவதைத் தடுப்பது உள்ளிட்ட 7 முக்கிய ஆபத்துகளில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதை இச்சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த விவகாரங்களைக் கண்காணிக்க ‘டிஜிட்டல் பாதுகாப்பு ஆணையம்’ என்ற புதிய ஒழுங்குமுறை அமைப்பு கனடாவில் உருவாக்கப்பட உள்ளது. மேலும், இந்தத் தடையில் யாருக்கெல்லாம் விதிவிலக்கு அளிக்கப்படும் என்பது குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் அளவுகோல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் கனடா அரசு தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version