16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகங்களைத் தடை செய்ய மலேசியா அரசு திட்டமிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்த திட்டம் முதல் முறை சட்டத்திற்கு கொண்டு வந்ததை தொடர்ந்து, தற்பொழுது மலேசிய அரசும் இதை பின்பற்ற இருக்கிறது.
இணையவழி மிரட்டல், மோசடிகள் மற்றும் பாலியல் சுரண்டல் போன்ற ஆன்லைன் தீங்கிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் ஆஸ்திரேலியாவின் அணுகுமுறையை மலேசிய அரசாங்கம் ஆய்வு செய்து வருவதாக தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்ஸில் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தத் தடையின் கீழ்,அடையாள அட்டைகள் அல்லது பாஸ்போர்ட் போன்றவற்றை பயன்படுத்தி சமூக ஊடகப் பயன்பாட்டாளர்களின் வயதைச் சரிபார்க்க போவதாகவும் தெரிவித்துள்ளார்.
16 வயதுக்குட்பட்டவர்களுக்கு அமைச்சரவை அங்கீகரித்த சமூக ஊடகத் தடை எப்போது மலேசியாவில் அமல்படுத்தப்படும் என்பதை திரு. ஃபட்சில் சரியாகக் கூறவில்லை.
“அரசாங்கம், ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் தங்கள் பங்களிப்பை வழங்கினால், மலேசியாவில் இணையம் வேகமாகவும், பரவலாகவும், மலிவு விலையிலும் இருப்பதை போல இனி இங்கே இணையும் குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு மிக பாதுகாப்பானாக அமையும் என்பதை மட்டும் என்னால் உறுதியாக கூற முடியும், என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்ஸில் கூறியுள்ளார்.
டென்மார்கில் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும் பிரான்ஸ் இத்தாலி கிரீஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளிலும் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்தாமல் இருக்க வயதை உறுதிப்படுத்தும் செயலி ஒன்றை சோதித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதன் மூலம் அங்கேயும் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த முடியாமல் போகும்.
இந்த திட்டம் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டால் 15 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் எந்தவித தீய திசையிலும், பிரச்சினையிலும் மாட்டிக் கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துவார்கள் என்று நாம் எதிர்பார்க்கலாம்.
