கிரிக்கெட் விளையாட போதுமான ஆட்கள் இல்லாதபோது சிறுவர்கள் தங்களது சூழலுக்கு ஏற்ப விளையாட்டை மாற்றியமைப்பது வழக்கம். அந்த வகையில், மலைப்பாங்கான ஒரு பகுதியில் சிறுவர்கள் சிலர் தங்களது அணியில் நான்கு கால் நண்பர்களை இணைத்துக்கொண்டு கிரிக்கெட் விளையாடியுள்ள சுவாரஸ்யமான வீடியோ தற்போது இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுள்ள இந்தக் காட்சிகளில், அழகிய மலைப் பின்னணியில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவதும், அவர்களுடன் இரண்டு நாய்கள் மிகுந்த உற்சாகத்துடன் களத்தில் ஓடித் திரிவதும் பதிவாகியுள்ளது. வழக்கமான செப்பனிடப்பட்ட மைதானங்களுக்கு மாறாக, கரடுமுரடான மலைப் பாறைகள் நிறைந்த பகுதியே அவர்களது ஆடுகளமாக உள்ளது.
https://x.com/mufaddal_vohra/status/2085194949176578427?
விளையாட்டின் போது அந்த நாய்கள் வெளிப்படுத்திய திறமைகள் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளன. குறிப்பாக, ஒரு நாய் விக்கெட் கீப்பர் போன்று பந்தைக் கவ்விப் பிடிப்பதும், பேட்ஸ்மேன் அடிக்கும் பந்துகளை மலைப்பாறைகளில் தாவிச் சென்று மீட்டு வந்து பந்துவீச்சாளரிடம் சேர்ப்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஒரு கட்டத்தில் நாய் ஒன்று பந்தைக் கேட்ச் செய்து அசத்தியதும், அதைக் கண்டு அந்தச் சிறுவன் ஆச்சரியமடைந்ததும் காண்போரை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
“வாழ்க்கையின் பிரீமியம் சந்தா” என்ற வாசகத்துடன் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ, இணையவாசிகள் பலரது குழந்தைப் பருவ நினைவுகளை மீட்டுக் கொண்டுவந்துள்ளதுடன், இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் சிறுவர்களும் விலங்குகளும் இணைந்து விளையாடும் விதம் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
