புராணக் கதைகள் மற்றும் சில வரலாற்றுப் பதிவுகள், போர்கள் வெடிப்பதற்குக் காரணமே பெண்கள்தான் என்ற தவறான பிம்பத்தைச் சமூகத்தில் கட்டமைத்துள்ளன. ஆனால், உண்மையில் கோடிக்கணக்கான உயிர்களைக் பலிவாங்கும் உலகப்போரை நிறுத்தி, அமைதியை நிலைநாட்டப் பெண்கள் முன்னெடுத்த வீரம் செறிந்த போராட்டங்கள் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. குறிப்பாக, 1917-ஆம் ஆண்டு ரஷ்யாவில் பெண்கள் நடத்திய புரட்சி, முதல் உலகப்போரின் போக்கையே மாற்றியமைத்தது.

1917-ஆம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி (பழைய ரஷ்ய நாட்காட்டியின்படி பிப்ரவரி 23), முதல் உலகப்போரின் உச்சகட்ட நெருக்கடியில் ரஷ்யா சிக்கியிருந்தது. பசி, பட்டினி, வறுமை மற்றும் எல்லையில் உயிரிழக்கும் வீரர்கள் என நாடு தத்தளித்துக் கொண்டிருந்தது. இந்த துயரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணிய ரஷ்யப் பெண்கள், பெட்ரோகிராட் நகரின் தெருக்களில் திரண்டனர். “Bread and Peace” என்ற முழக்கத்துடன் அவர்கள் நடத்திய வேலைநிறுத்தம் மற்றும் போராட்டம், ஜார் மன்னரின் ஆட்சிக்கு முடிவு கட்டியதோடு, உலகப்போர் நிறுத்தப்படுவதற்கான தொடக்கப் புள்ளியாகவும் அமைந்தது.

பெண்களின் இந்தத் தீரம் மிக்க போராட்டத்தின் விளைவாக, 1918-ஆம் ஆண்டில் போர் நின்றது மட்டுமல்லாமல், ரஷ்யப் பெண்களுக்கு வாக்குரிமையும் வழங்கப்பட்டது. பெண்களின் இந்த எழுச்சியான போராட்டத்தை நினைவுகூரும் வகையிலேயே, மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்படத் தொடங்கியது. அமைதியை நிலைநாட்டவும், உரிமைகளைப் பெறவும் பெண்கள் நடத்திய இந்தப் போராட்டம், இன்றும் உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கு ஒரு பெரும் உத்வேகமாகத் திகழ்கிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version