அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரானின் மீது தீவிரமான வான்வழித் தாக்குதல்களை நடத்தி வரும் வேளையில், இயற்கையும் ஈரானைச் சோதிக்கும் விதமாக இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்திய நேரப்படி இன்று (மார்ச் 3) மதியம் சுமார் 1:24 மணியளவில் தெற்கு ஈரானின் கெராஷ் (Gerash) பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 4.3 அளவாக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையம் பூமியின் அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.

ஈரானின் ஃபார்ஸ் மாகாணத்தில் உள்ள மக்கள் ஏற்கனவே அமெரிக்காவின் ஏவுகணைத் தாக்குதல்களால் மிகுந்த அச்சத்தில் இருந்தனர். குண்டுவெடிப்புச் சத்தங்களுக்கு மத்தியில் திடீரென நிலம் அதிரத் தொடங்கியதால், ஏவுகணைத் தாக்குதல் என நினைத்து மக்கள் அலறியடித்துக்கொண்டு வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். “ஒருபுறம் போர், மறுபுறம் இயற்கைச் சீற்றம் என ஈரான் இக்கட்டான சூழலில் சிக்கியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உடனடி உயிரிழப்புகள் அல்லது பெரிய அளவிலான கட்டிட சேதங்கள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும், ஏற்கனவே போர் காரணமாகப் பலவீனமடைந்திருந்த சில கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட அதே நேரத்தில், அமெரிக்கா ஈரானின் முக்கிய ராணுவ நிலைகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக புஷெர் மாகாணத்தில் 5 ஈரானிய வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், சவூதி மற்றும் கத்தாரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version