ஆசியப் பிராந்தியத்தில் இன்று அதிகாலை முதல் அடுத்தடுத்து நிகழ்ந்த நிலநடுக்கங்கள் பொதுமக்களிடையே பெரும் பீதியைக் கிளப்பியுள்ளன. மியான்மர், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியப் பெருங்கடல் என மூன்று வெவ்வேறு முக்கியப் பகுதிகளில் இந்த இயற்கைச் சீற்றம் பதிவாகியுள்ளது. முதலில், இன்று அதிகாலை 4:29 மணியளவில் மியான்மரின் வடக்குப் பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது. இது நைபிடாவிலிருந்து 137 கி.மீ தொலைவில், பூமிக்கு அடியில் சுமார் 140 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகத் தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்த அதிர்ச்சி விலகுவதற்கு முன்பாகவே, அடுத்த ஒரு மணி நேரத்தில், அதாவது சரியாக அதிகாலை 5:29 மணியளவில் ஆப்கானிஸ்தானில் நில அதிர்வுகள் உணரப்பட்டன. இது ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆகப் பதிவானது. மியான்மரை விடவும் இதன் தீவிரம் சற்று அதிகமாக இருந்த நிலையில், இது பூமிக்கு அடியில் 150 கி.மீ ஆழத்தில் நிலைகொண்டிருந்தது. அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த இரண்டு நிலநடுக்கங்களும் ஆசிய நாடுகளைச் சேர்ந்த மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது.

இவை அனைத்தையும் விட மிக வலுவான நிலநடுக்கம் இன்று காலை 8:10 மணியளவில் இந்தியப் பெருங்கடல் பகுதியில் பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இது 4.9 ஆகக் காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் வெறும் 10 கி.மீ ஆழத்திலேயே மையம் கொண்டிருந்ததால், இதன் தாக்கம் மற்ற இடங்களை விட அதிகமாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்த மூன்று சம்பவங்களிலும் உயிர்ச் சேதங்கள் அல்லது கட்டிடச் சேதங்கள் குறித்த உடனடித் தகவல்கள் ஏதும் இல்லை என்றாலும், ஒரே நாளில் நிகழ்ந்த இந்த தொடர் அதிர்வுகள் புவியியல் மாற்றங்கள் குறித்த கவலையை ஆய்வாளர்களிடையே ஏற்படுத்தியுள்ளன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version