டிஜிட்டல் சந்தைச் சட்டங்களை மீறியதாகக் கூறி கூகுள் நிறுவனத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் அபராதம் விதித்ததைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடியாக ஐரோப்பிய யூனியன் மீது பதில் இறக்குமதி வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையாக எச்சரித்துள்ளார்.
கூகுள் நிறுவனம் தனது தேடுபொறி மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில், தனது சொந்தச் சேவைகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து பிற நிறுவனங்களின் போட்டியைக் கட்டுப்படுத்துவதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றம் சாட்டியுள்ளது. இதன் காரணமாக 890 மில்லியன் யூரோ (சுமார் 1 பில்லியன் டாலர்) அபராதம் விதித்தது. கூகுள் தனது இந்த நடைமுறைகளை 60 நாட்களுக்குள் மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும், தவறினால் அதன் சராசரி தினசரி வருவாயில் 5% வரை கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தனது ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து முன்னணி அமெரிக்க நிறுவனங்களான ஆப்பிள், மெட்டா, அமேசான் மற்றும் கூகுள் போன்றவற்றை இலக்கு வைத்து நியாயமின்றி அபராதம் விதிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்கா என்பது ஐரோப்பாவிற்கான பணப் பெட்டி அல்ல என்று தெரிவித்துள்ள அவர், அமெரிக்க நிறுவனங்களையும், அமெரிக்க வரி செலுத்துவோரின் பணத்தையும் கொள்ளையடிக்கும் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக உடனடியாக ‘301 விசாரணை’ தொடங்கப்படும் என்றார். இந்த அபராதங்கள் ரத்து செய்யப்படவில்லையெனில் ஐரோப்பிய ஒன்றியம் மீது கடுமையான இறக்குமதி வரிகள் விதிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
