மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி சவூதி அரேபியா, பஹ்ரைன் மற்றும் ஜோர்டான் உள்ளிட்ட உலக நாட்டுத் தலைவர்களுடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார்.

பிரதமர் நரேந்திர மோடி திங்களன்று (மார்ச் 2) பஹ்ரைன் மன்னர் மற்றும் சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசருடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார். அப்போது, அந்த நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறும் வகையில் சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களை அவர் வன்மையாகக் கண்டித்தார். இந்த இக்கட்டான நேரத்தில், இந்தியா அந்த நாட்டு மக்களுடன் தோளோடு தோள் நின்று ஆதரவளிக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

தொடர்ந்து, ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவுடனும் பேசிய பிரதமர் மோடி, அப்பகுதியில் வேகமாக மாறிவரும் சூழல்கள் குறித்து தனது  கவலையைத் தெரிவித்தார்.

முதலில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் இந்திய சமூகத்தினரின் பாதுகாப்பு குறித்து விவாதித்தார்.

பஹ்ரைன் மன்னர் ஹமத் பின் ஈசா அல் கலீஃபா மற்றும் சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் ஆகியோருடனான இந்த உரையாடலின் போது, பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவாக நிலைநாட்டுவது மிக முக்கியமானது என்று பிரதமர் வலியுறுத்தினார். மேலும், இக்கட்டான இச்சூழ்நிலையில் அங்கு வசிக்கும் இந்திய சமூகத்தின் நலனைப் பாதுகாத்து வருவதற்கு அவர்களுக்குத் தனது நன்றியையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.”

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version