வங்கதேசத்தில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில், தண்டவாளத்தில் விழுந்த குழந்தையை காப்பாற்ற தந்தை ஓடும் ரயிலுக்கு அடியில் பாய்ந்து பாதுகாத்த பதறவைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரயில் நிலைய நடைமேடையில் நின்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஒரு குழந்தை தண்டவாளத்தில் தவறி விழுந்தது. அதே நேரத்தில் அதிவேகமாக ஒரு ரயில் அந்தத் தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்தது. ஒரு நொடி தாமதித்திருந்தால் பெரும் விபரீதம் நிகழ்ந்திருக்கும்.
https://x.com/AJENews/status/2049719682081456252?
நிலைமையை உணர்ந்த தந்தை, ஒரு நொடி கூட யோசிக்காமல் தண்டவாளத்தில் குதித்தார். ரயிலை நிறுத்த முடியாது என்பதை அறிந்த அவர், குழந்தையை தண்டவாளத்தின் நடுவே படுக்க வைத்து, அதன் மேல் தானும் படுத்துக் கொண்டார். ரயில் பெட்டிகள் அவர்கள் இருவருக்கும் மேலாக மின்னல் வேகத்தில் கடந்து சென்றன.
இந்த காட்சியைப் பார்த்த நடைமேடையில் இருந்த பயணிகள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். என்ன செய்வதென்று தெரியாமல் பலர் திகைத்து நின்றனர். பல பெட்டிகள் அவர்கள் மேல் கடந்த பிறகு, ரயில் நின்றதும் அங்கிருந்தவர்கள் ஓடிச் சென்று பார்த்தனர். வியக்கத்தக்க வகையில், தந்தை மற்றும் குழந்தை இருவருக்கும் எவ்வித பெரிய காயங்களும் இன்றி உயிர் தப்பினர்.
ரயில் சென்றவுடன் அங்கிருந்த பொதுமக்கள் தந்தையின் வீரத்தைப் பாராட்டி கைதட்டினர். இந்த வீடியோ இணையத்தில் பரவியதையடுத்து, உலகெங்கிலும் உள்ள நெட்டிசன்கள் அந்தத் தந்தையை “ரியல் ஹீரோ” என்று புகழ்ந்து வருகின்றனர்.
