சீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 82 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் உலகளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் ஷான்ஷி (Shanxi) மாகாணத்தில் உள்ள ‘லியுஷென்யு’ நிலக்கரி சுரங்கத்தில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. வெடி விபத்தைத் தொடர்ந்து, அங்கிருந்த பகுதிகளுக்குள் கார்பன் மோனாக்ஸைடு என்னும் நச்சு வாயு மிக அதிவேகமாகப் பரவியுள்ளது. இதன் காரணமாக, சுரங்கத்திற்குள் பணியில் இருந்த தொழிலாளர்கள் மயக்கமடைந்து, மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர். நச்சு வாயுவின் தீவிரமே பலி எண்ணிக்கை இந்த அளவிற்கு உயர முக்கியக் காரணம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து நடந்த லியுஷென்யு சுரங்கமானது அனைத்து விதமான நவீன பாதுகாப்பு மற்றும் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டது என்று கூறப்படும் நிலையில், இந்த விபத்து எவ்வாறு நேரிட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங், அதிநவீன பாதுகாப்பு கட்டமைப்புகள் இருந்தபோதிலும் இந்த விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து முழுமையான மற்றும் உயர்மட்ட விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளார். தற்போது விபத்து நடந்த பகுதியில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில், இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகிப் பார்ப்போரை உலுக்கியுள்ளது.
