சட்டவிரோத குடியேறிகளுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிரம்ப் நிர்வாகம் சிறப்பு ஊக்கத்தொகையை அறிவித்துள்ளது. அவர்கள் தாமாக முன்வந்து அமெரிக்காவை விட்டு வெளியேற ஒப்புக்கொண்டால், அவர்களுக்கு $3,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2.70 லட்சம் )மற்றும் கட்டண விமானப் பயணச் சலுகையும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புத் துறை (Department of Homeland Security) நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் CBP Home செயலியில் பதிவு செய்வதன் மூலம் இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்தது. மேலும், நாட்டை விட்டு வெளியேறத் தவறியதற்காக விதிக்கப்படும் அபராதங்கள் மற்றும் தண்டனைகளிலிருந்தும் அவர்கள் விலக்கு பெறுவார்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“இந்த விடுமுறைக்காலத்தில், அமெரிக்காவில் உள்ள சட்டவிரோத குடியேறிகள் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்புவதற்கு உதவுவோம் என்ற தனது வாக்குறுதியை உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது,” என்று உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
