இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (76) உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜெருசலேமில் உள்ள ஹடாசா ஐன் கெரெம் மருத்துவமனையில் 25ம் தேதி மாலை பெஞ்சமின் நெதன்யாகு அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்துப் இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவருக்குச் சிறு மருத்துவப் பரிசோதனை மற்றும் பல் சிகிச்சை அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் ஊடகங்களில் பிரதமர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, பிரதமர் அலுவலகம் இந்த விளக்கத்தை அளித்தது. அவர் எவ்வித ஆபத்தான நிலையிலும் இல்லை என்றும், அவருக்கு வழக்கமான பல் சிகிச்சை மட்டுமே அளிக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அவரது உடல்நிலை குறித்த கூடுதல் தகவல்கள் எதுவும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

கடந்த சில மாதங்களாகவே இஸ்ரேல் பிரதமரின் உடல்நிலை அந்நாட்டு அரசியலில் பெரும் கவனத்தைப் பெற்று வருகிறது. அண்மையில் தனக்கு புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு இருந்ததையும், அதற்கு சிகிச்சை பெற்று குணமடைந்ததையும் நெதன்யாகு தாமதமாகவே பொதுவெளியில் அறிவித்தார். போர்க்காலச் சூழலில் எதிரி நாடுகள் இதனைத் தவறாகப் பயன்படுத்தக்கூடும் என்பதாலேயே இத்தகவலை மறைத்ததாக அவர் விளக்கம் அளித்திருந்தார்.

கடந்த காலங்களில் அவருக்கு இதயத் துடிப்பை சீராக்கும் ‘பேஸ்மேக்கர்’ கருவி பொருத்தப்பட்டத, ஹெர்னியா அறுவை சிகிச்சை செய்யப்பட்டது மற்றும் புரோஸ்டேட் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது போன்ற நிகழ்வுகள், அவரது உடல்நிலை குறித்த பொதுமக்களின் எதிர்பார்ப்பையும் விவாதங்களையும் அதிகரித்துள்ளன.

நெதன்யாகுவின் உடல்நிலை குறித்து அவ்வப்போது எழும் வதந்திகள் மற்றும் மருத்துவமனை வருகைகள், இஸ்ரேல் அரசியலில் ஒருவிதச் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, இஸ்ரேல்- ஈரான் மோதல் மற்றும் உள்நாட்டு அரசியல் சூழலில், பிரதமரின் உடல்நலம் குறித்த வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version