சீனாவின் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் போன்ற முக்கிய நகரங்களில் உள்ள பொதுக் கழிவறைகள், தற்போது அதிநவீன மருத்துவப் பரிசோதனைக் கூடங்களாக உருமாறியுள்ளன. அங்குள்ள ‘ஸ்மார்ட் யூரினல்’ (Smart Urinal) எனப்படும் சிறுநீர் கழிக்கும் இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சென்சார்கள், ஒருவரின் சிறுநீரை ஆய்வு செய்து நொடிகளில் உடல்நல அறிக்கையைத் தயார் செய்கின்றன. இந்தியப் பயணி ஒருவர் இதுகுறித்த வீடியோவைச் சமூக வலைதளங்களில் பகிர, சீனாவின் இந்த அசுர வேகத் தொழில்நுட்ப வளர்ச்சி தற்போது உலக அளவில் வைரலாகி வருகிறது.

இந்தச் சேவையைப் பயன்படுத்த சுமார் 230 ரூபாய் (20 யுவான்) மட்டும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அங்குள்ள கியூஆர் (QR) குறியீட்டை ஸ்கேன் செய்துவிட்டுச் சிறுநீர் கழித்தால் போதும், அடுத்த இரண்டு நிமிடங்களில் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு, சிறுநீரகச் செயல்பாடு, கால்சியம் மற்றும் வைட்டமின்கள் உட்பட 14 விதமான உடல்நலக் குறியீடுகள் திரையில் தோன்றும். செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் கணக்கிடப்படும் இந்த முடிவுகள், உடனடியாகப் பயனாளரின் அலைபேசிக்கு விரிவான அறிக்கையாக அனுப்பி வைக்கப்படுகின்றன.

சாதாரணமாகப் பொதுக் கழிவறையைப் பயன்படுத்தச் சென்ற ஒரு பயணி, இந்த இயந்திரத்தின் மூலம் தனக்குச் சர்க்கரை நோய் இருப்பதைக் கண்டறிந்து சிகிச்சை பெற்ற சம்பவம் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. பெரிய ஆய்வகங்களுக்குச் சென்று மணிக்கணக்கில் காத்திருக்காமல், அன்றாடப் பயணங்களுக்கு இடையே இவ்வளவு எளிதாக உடல்நிலையைச் சோதித்துக் கொள்ளும் இந்த வசதிக்கு நெட்டிசன்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. “இந்தியாவிலும் இது போன்ற தொழில்நுட்பங்கள் எப்போது பயன்பாட்டிற்கு வரும்?” எனப் பலரும் ஆர்வத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version