உணவுப் பாதுகாப்பு, நிலையான விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாடு ஆகியவற்றில் ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) மிக உயரிய விருதான ‘அக்ரிகோலா’ (Agricola Medal) பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள FAO தலைமையகத்தில் நடைபெற்ற விழாவில், அமைப்பின் தலைமை இயக்குநர் டாக்டர் கியூ டோங்யு இந்த உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவித்தார். கடந்த 30 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் FAO தலைமையகத்திற்குச் செல்வது இதுவே முதல்முறையாகும்.
இந்த உயரிய அங்கீகாரம் குறித்துப் பிரதமர் மோடி தனது ‘X’ பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “ஐநா சபையின் இந்த உயரிய ‘அக்ரிகோலா’ பதக்கத்தை மிகுந்த மனநிறைவோடும், பணிவோடும் ஏற்றுக் கொள்கிறேன். இந்த கௌரவத்தை இந்தியாவின் உண்மையான உணவு வழங்குநர்களான விவசாயிகளுக்கு நான் சமர்ப்பிக்கிறேன்.
இது லட்சக்கணக்கான இந்திய விவசாயிகள், கால்நடை வளர்ப்போர், மீனவர்கள், வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் உழைக்கும் தொழிலாளர்களின் கடின உழைப்பிற்கு கிடைத்த மிகச்சிறந்த அங்கீகாரமாகும். மனித நல்வாழ்வு, உணவுப் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கான இந்தியாவின் இடைவிடாத அர்ப்பணிப்புக்குக் கிடைத்த சான்றாக இதைக் கருதுகிறேன்.”
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்குப் பிறகு (2008-ல்), இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சர்வதேசப் பதக்கத்தைப் பெறும் இரண்டாவது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆவார். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் 3,000 பருவநிலை மாற்றத்தைத் தாங்கி வளரும் பயிர் ரகங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், ட்ரோன்கள், AI தொழில்நுட்பம் மற்றும் துல்லியப் பண்ணையம் மூலம் இந்திய விவசாயம் உலகிற்கே முன்மாதிரியாகத் திகழ்வதாகவும் இவ்விழாவில் சுட்டிக்காட்டப்பட்டது.
உலகளவில் பசிப்பிணியைப் போக்கவும், உணவு உற்பத்தியைப் பெருக்கவும் அரும்பாடுபடும் தலைவர்களுக்கு மட்டுமே ஐநா சபை வழங்கும் இந்த ‘அக்ரிகோலா’ பதக்கம் தற்போது இந்தியாவிற்கு கிடைத்துள்ளது ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமை சேர்க்கும் விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
