விளாடிமிர் புடினுக்கு வழங்கப்பட்ட விருந்தில் சசி தரூர் பங்கேற்றது காங்கிரஸ் தலைமையில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்ய அதிபர் புடினின் இந்திய வருகையின் போது, வெளிநாட்டு தலைவர்களை சந்திக்க எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் குற்றம்சாட்டினர். இந்தநிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையில் புதினுக்கு வழங்கப்பட்ட இரவு விருந்தில் காங்கிரஸ் தலைமை தலைவர்களை அழைக்காமல், சசி தரூரை மட்டும் அழைத்திருப்பது கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா கூறியதாவது, எதிர்க்கட்சித் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் இந்த நிகழ்விற்கு அழைக்கப்படவில்லை. சசி தரூர் கட்சியினரை கலந்தாலோசிக்கவில்லை. எதிர்க்கட்சியின் தலைமைக்கு அழைப்பு விடுக்காத நிலையில், எனக்கு மட்டும் அழைப்பு விடுப்பது ஏன்? இதில் ஏதேனும் அரசியல் விளையாட்டு நடக்கிறதா? அதில் நான் ஏன் பங்கேற்க வேண்டும் என்று சசி தரூர் கேட்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

சசி தரூருக்கு ஆதரவாக பாஜ எம்பி மனோஜ் திவாரி கூறுகையில், ‘காங்கிரஸ் தலைமை ஏன் இதைக் கண்டிக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. வெளியுறவுக் கொள்கையில் பலரும் பங்களித்துள்ளனர். இது ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயம்,’ என்றார். இருப்பினும், வெளியுறவுத்துறை நிலைக்குழுவின் தலைவர் என்ற முறையில் தான் அழைக்கப்பட்டதாக சசி தரூர் பதிலளித்தார்.

இருப்பினும், பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களும் விருந்தில் கலந்து கொண்டனர். எதிர்க்கட்சித் தலைவர்களை விலக்கியதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version