சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், ஐரோப்பிய நாடுகளுக்கு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை மீண்டும் வழங்கத் தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஈரானுடனான போர் பதற்றங்கள் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரஷ்யா உலக அளவில் இரண்டாவது பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளராகவும், அதிக இயற்கை எரிவாயு கையிருப்பு கொண்ட நாடாகவும் விளங்குவதால், புடினின் இந்த முன்னெடுப்பு சர்வதேச சந்தையில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

திங்கட்கிழமை நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய புடின், ஐரோப்பிய நாடுகள் அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாமல், தங்களுக்குள் இருக்கும் பகையைத் தவிர்த்து நீண்டகால ஒத்துழைப்பை உறுதி செய்தால் எரிபொருளை வழங்கத் தயார் என்று நிபந்தனை விதித்துள்ளார். “நாங்கள் ஒருபோதும் ஒத்துழைப்பை மறுத்ததில்லை; ஆனால் ஐரோப்பிய நாடுகளிடமிருந்து முறையான சமிக்ஞைகள் வர வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ட்ரெய்ட் ஆஃப் ஹார்முஸ் (Strait of Hormuz) வழியாக நடைபெறும் எண்ணெய் போக்குவரத்து அடுத்த சில வாரங்களில் முற்றிலுமாகத் தடைபடக்கூடும் என்பதால், ஐரோப்பா ரஷ்யாவை நோக்கி மீண்டும் திரும்பும் சூழல் உருவாகியுள்ளது.

மறுபுறம், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டாலரைத் தாண்டியுள்ளதால், அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளத் தொடங்கியுள்ளது. கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டைக் குறைக்கவும், விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தவும் ரஷ்யாவின் மீதான சில பொருளாதாரத் தடைகளை நீக்க டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில், ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா போன்ற நாடுகள் ஏற்கனவே ரஷ்யாவிடமிருந்து எரிபொருளைப் பெற்று வரும் நிலையில், இதர ஐரோப்பிய நாடுகளும் இதே பாதையைத் தேர்ந்தெடுக்குமா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version