மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும் சூழலில், ஈரானுக்கு ரஷ்யா உளவு மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்புத் தகவல்களை வழங்கி உதவி வருவதாக உக்ரைன் அதிபர்  ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.

ஜூலை தொடக்கத்தில் இருந்து வளைகுடா நாடுகள் மற்றும் அங்குள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை ரஷ்யா தனது செயற்கைக்கோள்கள் மூலம் தீவிரமாகக் கண்காணித்து வருவதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்தத் தரவுகள் ஈரானுக்குப் பகிரப்பட்டு, அதன்மூலம் அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல்களை நடத்தி வருவதாகக் ஜெலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

பஹ்ரைன், ஜோர்டான், குவைத் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ முகாம்களைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்த ரஷ்யாவின் இந்த உளவுத் தகவல்களே காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காஸ்பியன் கடல் பகுதியில் ரஷ்யா மற்றும் ஈரானுக்கு இடையே சட்டவிரோதமாக ராணுவத் தளவாடங்களை ஏற்றிச் சென்ற வணிகக் கப்பல்கள் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், ரஷ்யா- ஈரான் ராணுவக் கூட்டணியை பலவீனப்படுத்தவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

ஈரானுக்கு ஆயுதங்களோ அல்லது உளவுத் தகவல்களோ வழங்கி உதவக் கூடாது என ரஷ்யா மற்றும் சீனாவிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்த அடுத்த நாளே, உக்ரைன் அதிபரின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது சர்வதேச அளவில் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version