ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி அண்மையில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்தை முன்னின்று கவனித்து வந்த தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவர் அலி லரிஜானியும் (Ali Larijani) கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நேற்று (மார்ச் 17) டெஹ்ரான் அருகே இஸ்ரேலிய விமானப்படை நடத்திய துல்லியமான வான்வழித் தாக்குதலில் லரிஜானி கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். காமேனியின் மறைவுக்குப் பிறகு ஈரானின் ‘நடைமுறைத் தலைவராக’ (de facto leader) செயல்பட்டு வந்தவர் லரிஜானி என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானில் தங்களுக்குச் சாதகமான மற்றும் நிலையான ஒரு ஆட்சியை ஏற்படுத்த விரும்பும் அமெரிக்காவும் இஸ்ரேலும், அங்குள்ள முக்கியத் தலைவர்களையே தங்களின் முதல் இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. லரிஜானியுடன் சேர்த்து, ஈரானின் ‘பசிஜ்’ (Basij) துணை ராணுவப் படையின் தளபதி குலாம்ரெசா சோலைமணியும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) உறுதிப்படுத்தியுள்ளது. ஈரானின் மிக உயரிய அதிகார அமைப்பான தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலராக இருந்த லரிஜானி, அந்நாட்டின் அணுசக்தி பேச்சுவார்த்தைகள் மற்றும் பாதுகாப்பு வியூகங்களில் மூளையாகச் செயல்பட்டவர்.
இருப்பினும், இந்த மரணம் குறித்து ஈரான் அரசுத் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலோ அல்லது மறுப்போ வெளியாகவில்லை. லரிஜானியின் சமூக வலைதளப் பக்கத்தில் இன்று காலை ஒரு கடிதம் பகிரப்பட்ட போதிலும், அது அவர் உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்தும் ஆதாரமாகக் கருதப்படவில்லை; அது முன்கூட்டியே எழுதப்பட்டதாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. உச்ச தலைவர் காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்ட ஒரு சில வாரங்களிலேயே, ஈரானின் அடுத்த முக்கியத் தலைவரும் இலக்கு வைக்கப்பட்டிருப்பது மத்திய கிழக்கில் பெரும் போர் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

