சிங்கப்பூரில் வரும் 2026ம் ஆண்டு ஜனவரி இறுதியில் இருந்து விமானப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் மிகவும் கடுமையாக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிற நாடுகளில் இருந்து தங்கள் நாட்டுக்கு வரும் விமான நிறுவனங்களுக்கு சிங்கப்பூர் குடிவரவு மற்றும் சோதனைச்சாவடிகள் ஆணையம் (ICA) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், சிங்கப்பூருக்கு வரும் பயணிகளின் விபரங்கள் மற்றும் ஆவணங்களை முன்கூட்டியே அனுப்பி வைக்க வேண்டும். அதனை ஆய்வு செய்த பிறகு, தகுதியான ஆவணங்கள் இருந்தால் மட்டுமே அவர்கள் சிங்கப்பூர் வர அனுமதிக்கப்படுவார்கள். இல்லையெனில், அவர்கள் புறப்படும் விமான நிலையத்திலே தடுத்து நிறுத்தப்படுவார்கள்.

குறிப்பாக, உரிய விசா அல்லது 6 மாத காலத்திற்கு செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லாத பயணிகளுக்கு அனுமதி கிடையாது.

சிங்கப்பூருக்குச் செல்ல விரும்பும் பயணிகள், விமான டிக்கெட் எடுப்பதற்கு முன், ஐசிஏ தளத்தின் (ICA Feedback Channel) வழியாக நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும். உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஐசிஏ நேரடியாக அனுமதி அளிக்கும் வரை பயணத்தை திட்டமிடக் கூடாது.

இந்த விதிகளை கடைபிடிக்காத விமான நிறுவனங்களுக்கு ரூ.7 லட்சம் வரையில் அபராதம் விதிக்கப்படும். மேலும், தகுதியான ஆவணங்கள் இல்லாத பயணியை அனுமதித்த விமான நிறுவன ஊழியர்களுக்கு 6 மாதம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது.

உலகளவில் மிகவும் பாதுகாப்பான நாடுகளில் சிங்கப்பூர் முன்னிலை வகிக்கிறது. இதனை தொடர்ந்து உறுதி செய்யும் விதமாக, விமான நிலையங்களில் கடுமையான கட்டுப்பாடுகளை அந்நாடு விதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version