டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் பணிபுரியும் 12,000 பேரை இந்த நிதியாண்டில் பணிநீக்கம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதிலும் ஐடி எனப்படும் தகவல் தொழில்நுட்ப துறையினர் ஆட்குறைப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல்லாயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். அந்த வகையில் டாடா கன்சல்டன்சி தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கி வருகிறது. மும்பையை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் இந்த நிறுவனத்தில் லட்சகணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் டிசிஎஸ் நிறுவனம் ஆட்குறைப்பில் ஈடுபட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கீர்த்திவாசன் கூறுகையில், “டி.சி.எஸ் நிறுவனத்தில் பணிபுரியும் 12 ஆயிரம் பேர் இந்த நிதியாண்டில் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர். செயற்கை நுண்ணறிவுக்கு முன்னுரிமை கொடுக்கும்வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பணிநீக்கம் செய்யப்பட உள்ள அனைவருமே இடைநிலை மற்றும் மூத்த நிலையில் பணியாற்றி வரும் ஊழியர்களாவர். ஒட்டு மொத்த பணியாளர்கள் எண்ணிக்கையில் இந்த ஆட்குறைப்பு என்பது வெறும் 2 சதவீதம் மட்டுமே. இது எளிதான முடிவு அல்ல” என்றார். இந்த பணி நீக்க நடவடிக்கை என்பது, 2026-ம் ஆண்டு நிதியாண்டில் படிப்படியாக அமல்படுத்தப்பட உள்ளது.