இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பதிவுகளில், காகரோச் ஜனதா கட்சி ஆதரவாளர்கள் எனக் கூறிக் கொள்ளும் சிலர் பதிவிட்டுள்ள கமெண்ட்கள் தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகின்றன.
மாணவர்களின் பிரச்சினைகளைக் கேட்கும்படி அவரது காதலனிடம் கூறுங்கள் (Oi tell your boyfriend to listen to students) என்ற வாசகத்துடன் அவர்கள் பதிவிட்டுள்ள கமெண்ட்கள் சமூக வலைதளங்களில் பலத்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்த விவகாரம் குறித்து நெட்டிசன்கள் பலரும் தங்களது மாறுபட்ட கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். உள்நாட்டு மாணவர் போராட்டத்திற்கும் வெளிநாட்டுத் தலைவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாத நிலையில், உலகத் தலைவர்களின் சமூக வலைதளப் பக்கங்களில் போய் இதுபோன்று கருத்து பதிவிடுவது உலக அரங்கில் இந்தியாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என ஒரு தரப்பினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதேசமயம், சமூக வலைதளங்களில் மற்றொரு தரப்பினர் இதைப் பார்த்து நகைச்சுவையாகவும், மீம்ஸ்களாகவும் பகிர்ந்து விவாதித்து வருகின்றனர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியும் சர்வதேச மாநாடுகளில் சந்தித்துக் கொள்ளும் போதெல்லாம் அது தொடர்பான புகைப்படங்களும், ‘மெலோடி’ (Melodi) என்ற ஹேஷ்டேக்கும் இணையத்தில் வைரலாவது வழக்கம். இந்தச் சூழலைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட போராட்ட ஆதரவாளர்கள், தற்போது நேரடியாக மெலோனியின் பதிவிலேயே சென்று இத்தகைய கருத்துகளைப் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
