மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிமுடன் வெளியிட்ட கூட்டு செய்தியறிக்கையில், இந்தியா மற்றும் மலேசியா இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த பல முக்கிய துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். நம்பிக்கையும் கூட்டாண்மையும் அடிப்படையாகக் கொண்டு இரு நாடுகளும் முன்னேற திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

பாதுகாப்புத் துறையில், தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுதல், உளவுத் தகவல்களைப் பகிர்வு செய்தல் மற்றும் கடல் பாதுகாப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் இந்தியா மற்றும் மலேசியா கவனம் செலுத்தும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை பேணுவதற்காக பாதுகாப்புத் துறையிலான ஒத்துழைப்பை இரு நாடுகளும் மேலும் விரிவுபடுத்தும் என்றும் அவர் கூறினார்.

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். இதனை கருத்தில் கொண்டு, செயற்கை நுண்ணறிவு (AI), டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும்  செமிகண்டக்டர் (semiconductors) ஆகிய துறைகளில் இந்தியா மற்றும் மலேசியா தங்களின் கூட்டாண்மையை மேலும் முன்னெடுக்க உள்ளன என்றும் அவர் கூறினார்.

மேலும், சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு போன்ற முக்கிய துறைகளிலும் இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு வலுப்படுத்தப்படும் என பிரதமர் தெரிவித்தார். இன்று நடைபெற்ற CEO மன்றம் (CEO Forum) வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றும் அவர் கூறினார். இதன் மூலம் இரு நாடுகளின் நிறுவனங்களும் ஒருவரின் நாட்டில் மற்றொருவர் முதலீடு செய்து வர்த்தகத்தை விரிவுபடுத்த சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும் என்றும், இதனால் வேலைவாய்ப்புகள் அதிகரித்து பொருளாதாரம் மேலும் வலுப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

நம்பிக்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர் மோடி, மூலோபாய நம்பிக்கையின் அடிப்படையில் இந்தியா மற்றும் மலேசியா பொருளாதார மாற்றத்தை நோக்கி வலுவான பாதையை உருவாக்கும் என தெரிவித்தார். இந்த கூட்டாண்மை பொதுமக்களுக்கும் பயன் அளிக்கும் வகையில் அமையும் என்றும் அவர் கூறினார்.

அமைதியான, பாதுகாப்பான மற்றும் செழிப்பான எதிர்காலத்தை நோக்கி இந்தியா தனது நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்பட விரும்புகிறது என்றும் பிரதமர் விளக்கினார். அந்த நோக்கத்தின் ஒரு பகுதியாகவே மலேசியாவுடன் மேற்கொள்ளப்படும் இந்த ஒத்துழைப்பு அமைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். எதிர்காலத்தில், இரு நாடுகளுக்கிடையிலான உறவு மேலும் ஆழமடைந்து, ஆசியப் பிராந்தியத்தில் நிலைத்தன்மைக்கும் வளர்ச்சிக்கும் புதிய திசையை வழங்கும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

முன்னதாக, மலேசியாவில் கல்வி, ஊடகம் மற்றும் கலாச்சாரத்தில் தமிழின் உயிர்ப்பு வலுவை காணலாம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். இன்று கையெழுத்திட்ட ஆடியோ விஷுவல் ஒப்பந்தத்தின் மூலம், திரைப்படம் மற்றும் இசை குறிப்பாக தமிழ் திரைப்படங்கள் நம் இதயங்களுக்கு நெருக்கத்தை அளிக்கும் என தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். மலேசியாவில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, தமிழ் மீதான் அன்பு இந்தியா – மலேசியாவை இணைக்கிறது என்றார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version