சுமார் 114 ஆண்டுகளுக்கு முன்பு அட்லாண்டிக் கடலில் மூழ்கிய வரலாற்றுப் புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட அரிய பொருட்கள் லண்டனில் ஏலம் விடப்பட்டன. இதில், அந்த விபத்திலிருந்து உயிர் தப்பிய லாரா மேபல் ஃபிரான்காடெல்லி என்ற பெண்மணி அணிந்திருந்த ‘லைஃப் ஜாக்கெட்’, யாரும் எதிர்பாராத வகையில் சுமார் 8.2 கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது.
முதல் வகுப்பில் பயணித்த லாரா, கப்பல் மூழ்கத் தொடங்கியபோது இந்த ஜாக்கெட்டை அணிந்துகொண்டு உயிர்காப்புப் படகு மூலம் உயிர் தப்பியவர். இங்கிலாந்தைச் சேர்ந்த இந்தச் சுற்றுலா கப்பல் 1912-ல் பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானதில் 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், எஞ்சிய சில ஆதாரங்களில் ஒன்றாக இந்த ஜாக்கெட் பாதுகாக்கப்பட்டுள்ளது.
இந்த அரிய பொருளை ஏலத்தில் எடுத்த ஆண்ட்ரூ ஆல்ட்ரிட்ஜ், டைட்டானிக் குறித்த தேடலும் ஆர்வமும் இன்னும் மக்களிடையே குறையவில்லை என்பதற்கு இதுவே சாட்சி என மகிழ்ச்சி தெரிவித்தார். குறிப்பாக, இந்த லைஃப் ஜாக்கெட்டில் லாரா மற்றும் அவருடன் பிழைத்தவர்கள் தங்களது கையொப்பங்களை இட்டுள்ளனர் என்பது இதன் சிறப்பம்சமாகும். இதே ஏலத்தில் டைட்டானிக் கப்பலின் சிறிய படகில் பயன்படுத்தப்பட்ட குஷன் ஒன்றும் சுமார் 5 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. ஒரு நூற்றாண்டு கடந்தும் டைட்டானிக் தொடர்பான பொருட்களுக்கு உலகளவில் கிடைத்துவரும் வரவேற்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

