எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு முக்கியத்துவம் பெற்றது. இதற்குக் காரணம் அமெரிக்க அதிபர் டிரம்ப். ஏனென்றால் இதுவரை ஏழு போர்களை நிறுத்திவிட்டேன். எனக்கு கட்டாயம் நோபல் பரிசு தர வேண்டும்’ என்று கூறிவருகிறார். விருது அறிவிக்கப்பட்ட சமயத்தில், எனக்கு நோபல் பரிசு தராவிட்டால் அது அமெரிக்காவுக்கு பெரும் அவமானம்’ என வெளிப்படையாக பேசியிருந்தார். இதுமட்டுமல்லாமல், அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசை கொடுங்கள். அவர் அதற்கு தகுதியானவர் என்றும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவும் பேசியிருந்தார்.
ஆனால், டிரம்ப்க்கு விருது வழங்கப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2025ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவின் எதிர்க்கட்சி தலைவர் மரியாவுக்கு வழங்கப்பட்டது. இந்தநிலையில் தற்போது, அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு அமைதிக்கான பரிசு வழங்கி கவுரவுக்கப்பட்டுள்ளது.
அதாவது, 2026 ஜூன்-ஜூலை மாதங்களில் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் உலக கோப்பை கால்பந்து போட்டி நடக்கிறது. இதற்கான போட்டி அட்டவணை வெளியீடு நிகழ்ச்சி வாஷிங்டனில் நடந்தது. இதில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் சார்பில் புதிதாக உருவாக்கப்பட்ட அமைதிக்கான பரிசு வழங்கப்பட்டது.
இந்த விருதை டிரம்ப்புக்கு சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவர் கியானி இன்பான்டினோ வழங்கினார். அப்போது டிரம்புக்கு தங்கப்பதக்கம் அணிவிக்கப்பட்டது. தங்க கோப்பையும் வழங்கப்பட்டது.
இதுதொடர்பாக இன்பான்டினோ கூறும் போது, மக்கள் மீது அக்கறை கொண்ட தலைவர் டிரம்ப். உலகம் முழுவதும் அமைதி மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இது உங்கள் அமைதி பரிசு என்றார். தனக்கு அமைதிக்கான பரிசு வழங்கப்பட்டதற்கு டிரம்ப் நன்றி தெரிவித்து கொண்டார். அப்போது அவர் கூறும்போது, இது உண்மையிலேயே என் வாழ்க்கையின் மிகப்பெரிய மரியாதைகளில் ஒன்றாகும் என்று தெரிவித்தார்.
