2025 – 26 ஆண்டுக்கான புதிய தேசிய பாதுகாப்பு கொள்கையை, அதிபர் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. இதில், இந்தியாவை முக்கிய கூட்டாளி நாடாக அறிவித்துள்ளது.
இந்தோ–பசிபிக் பகுதியில் நிலைத்தன்மையை உறுதி செய்யவும், தென் சீனக் கடல் திறந்தும் பாதுகாப்புடனும் இருக்கவும், முக்கிய தொழில்நுட்பங்களின் எதிர்காலத்தை பாதுகாக்கவும் அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்புகிறது என்று டிரம்ப் நிர்வாகம் சமீபத்தில் வெளியிட்ட தேசிய பாதுகாப்பு கொள்கை (NSS) ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகை வெள்ளிக்கிழமை வெளியிட்ட 33 பக்க புதிய தேசிய பாதுகாப்பு கொள்கை ஆவணத்தில், சீனாவுடன் இராணுவ மோதலைத் தவிர்ப்பது, தூதரக மற்றும் இராணுவ கவனத்தை மீண்டும் செலுத்துவது, மேலும் இந்தியா உள்ளிட்ட கூட்டாளி நாடுகள் மற்றும் இணை நாடுகளுடன் அமெரிக்காவின் உறவுகளை மறுசீரமைப்பது என டிரம்ப் நிர்வாகம் விரும்புகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உலகளவில் ஆதிக்கம் செலுத்துவதை அமெரிக்கா நோக்கமாகக் கொள்ளவில்லை. இருப்பினும், ஆனால், “எங்கள் நலன்களுக்கு அச்சுறுத்தக்கூடிய அளவிற்கு எந்த நாடும் ஆதிக்கம் பெறாமல் தடுப்பது” அமெரிக்காவின் பொறுப்பாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்காக, சீனாவுடன் உள்ள போட்டியில் அமெரிக்காவின் பொருளாதார திறனை வலுப்படுத்தவும், இராணுவத் தடுப்பு ஆற்றலை மேலும் அதிகரிக்கவும், கூட்டாளிகள் மற்றும் பங்குதார நாடுகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்தோ–பசிபிக் பாதுகாப்பில் அதிகமாக பங்காற்றுவதற்காக, இந்தியாவுடன் உள்ள வர்த்தக மற்றும் பிற துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும். இதில் ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவுடன் நடைபெறும் நான்குநாட்டு (Quad) கூட்டாண்மைத் தளத்தையும் தொடர்ந்து முன்னேற்றுவது சேரும்,” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் சீனக் கடல் , கடல் வழி வர்த்தகத்திற்கான மிக முக்கியமான பாதை. சீனாவைப் போன்ற ஒரு “போட்டியாளர்” நாட்டின் கட்டுப்பாட்டுக்குள் சென்றால், அது உலக பொருளாதாரத்திற்கான வர்த்தக ஓட்டத்தை கட்டுப்படுத்தக்கூடும் என்ற கவலையையும் NSS வெளிப்படுத்துகிறது. இந்த நிலை ஏற்படாமல் தடுக்க வலுவான இராணுவத் தடுப்புச் சக்தியை உருவாக்குவது NSS-இன் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்; இதற்கு இந்தியாவுடன் இன்னும் நெருக்கமான ஒத்துழைப்பும் அவசியமாகும்.
“இதற்காக எங்கள் இராணுவத்திலும், குறிப்பாக கடற்படை திறன்களில் கூடுதல் முதலீடு மட்டுமல்ல, இந்த பிரச்சினை சரியாக சமாளிக்கப்படாவிட்டால் பாதிக்கப்படக்கூடிய இந்தியா, ஜப்பான் மற்றும் அதற்கும் மேல் உள்ள அனைத்து நாடுகளுடனும் வலுவான ஒத்துழைப்பு அவசியமாகும்,” என NSS குறிப்பிடுகிறது.
முக்கிய தொழில்நுட்பங்களில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக, இந்திய மற்றும் ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளின் நாடுகளுடன் தொழில்நுட்ப உறவுகளை மேலும் ஊக்குவிக்க அமெரிக்கா நினைக்கிறது என்று கொள்கை ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
