தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கும் இடையே கடந்த சில நாட்களாகவே மோதல் போக்கு நிலவி வந்தது. அமெரிக்காவுக்குள் ஃபெண்டானில் என்னும் போதைப் பொருள் ஊடுருவ நிகோலஸ் மதுரோவே காரணம் என டிரம்ப் குற்றம் சாட்டி வந்தார். மேலும் வெனிசுலாவுக்கு பொருளாதாரத் தடைகள் விதித்துள்ளார். அதே நேரம் டிரம்பின் குற்றச்சாட்டை வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ முற்றிலுமாக மறுத்துள்ளார்.
இந்த சூழலில் நேற்று அதிகாலை 2 மணியளவில் வெனிசுலாவின் தலைநகர் கராகஸ் நகரில் சுமார் 7 இடங்களில் அமெரிக்க ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. இதன்பின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்க அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்டார். அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் நேற்று அதிகாலை 4:30 மணியளவில் இத்தகவலை வெளியிட்டார்.
அதில், “மதுரோ மற்றும் அவரது மனைவி பிடிபட்டனர். அவர்கள் வெனிசுலாவிலிருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை அமெரிக்க சட்ட அமலாக்கத் துறையினருடன் இணைந்து வெற்றிகரமாக முடிக்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார். இது குறித்து விரிவான செய்தியாளர் சந்திப்பு பின்னர் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து வெனிசுலா அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறைபிடித்த அமெரிக்க படைகள், அவரை நியூயார்க்கிற்கு அழைத்து சென்றன. நியூயார்க்கில் அவர்கள் மீது சுமத்தப்பட்ட கொக்கைன் கடத்தல், போதைப்பொருள் பயங்கரவத குற்றச்சாட்டுகள் மீது வழக்கு விசாரணை நடைபெற உள்ளது. இதனிடையே கைவிலங்குடன் மதுரோ விமானத்தில் இருந்து அழைத்து செல்லப்படும் காட்சி மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடங்கங்களில் வைரலாகி வருகின்றன.
