மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிக சக்திவாய்ந்த நாடாக கருதப்படும் சவுதி அரேபியாவை, நேட்டோ அல்லாத முக்கிய நாடுகளின் கூட்டமைப்பில் (MAJOR NON – NATO ALLIES) அமெரிக்கா சேர்த்துள்ளதாக அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடியாக அறிவித்தார்.

இஸ்ரேல் – காஸா போரில் அமெரிக்க நிலைப்பாட்டுக்கு எதிராக செயல்பட்டு வந்த சவுதி அரேபியாவுக்கு, ‘நேட்டோ அல்லாத நாடுகள் கூட்டமைப்பு’ அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பது சர்வதேச அளவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான், நேற்று காலை அமெரிக்காவுக்கு வருகை தந்தார். வாஷிங்டன் விமான நிலையத்துக்கு வந்த அவர், அங்கிருந்து வெள்ளை மாளிகைக்கு கார் மூலமாக சென்றார்.

வெள்ளை மாளிகையில் அவரை வரவேற்க பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இளவரசருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர்களின் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, இளவரசர் முகமது பின் சல்மானுக்கு வெள்ளை மாளிகையில் இரவு விருந்து வழங்கப்பட்டது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அமைச்சர்கள் உள்ளிட்டோரும் இந்த விருந்தில் கலந்து கொண்டனர்.

பின்னர், அதிபர் டொனால்டு டிரம்ப்பும், இளவரசர் முகமது பின் சல்மானும் தனியே சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக இந்த ஆலோசனை நீடித்தது.

கூட்டம் முடிந்து வெளியே வந்த அதிபர் டிரம்ப்பும், இளவரசர் முகமது பின் சல்மானும் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது டிரம்ப் கூறுகையில், “இந்த தருணத்தில் மிக முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நேட்டோ அல்லாத நாடுகளின் கூட்டமைப்பில் (Major Non Nato Alliance) இன்று முதல் சவுதி அரேபியா இணைகிறது. இந்த கூட்டமைப்பில் சவுதி அரேபியாவை வரவேற்கும் வகையில், அமெரிக்காவின் F-35 போர் விமானங்களை அந்நாட்டிற்கு விற்க ஒப்புதல் அளித்துள்ளேன்” என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய இளவரசர் முகமது பின் சல்மான், “அமெரிக்காவில் சவுதி அரேபியாவின் முதலீட்டை பல மடங்கு அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். அதன்படி, இப்போதைய முதலீடான 600 பில்லியன் டாலரை, 1 டிரில்லியன் டாலராக அதிகரிக்க போகிறோம். நீங்கள் (டிரம்ப்) உருவாக்கி கொடுத்துள்ள வாய்ப்பு, இன்றைய தினத்திற்கானது அல்ல. அது நீண்ட நெடிய காலத்திற்கான வாய்ப்பு” என கூறினார்.

முன்னதாக, இந்த F-35 போர் விமானங்களை சவுதி அரேபியாவுக்கு விற்க அமெரிக்காவின் நட்பு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக, F-35 போர் விமானங்களின் உயர் தொழில்நுட்பத்தை சீனா தெரிந்துகொள்ளும் அபாயம் இருப்பதாக அந்நாடுகள் எச்சரிக்கை விடுத்திருந்தன. எனினும், இந்த போர் விமானங்களை தற்போது சவுதிக்கு விற்க முன்வந்துள்ளார் டொனால்டு டிரம்ப்.

இதனிடையே, இந்த செய்தியாளர் சந்திப்பின் போது ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகை நிருபர் ஜமால் காஷோகி கொலை செய்யப்பட்டது தொடர்பாக இளவரசரிடம் நிருபர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.

உடனே குறுக்கிட்ட அதிபர் டிரம்ப், நிருபர் ஜமால் காஷோகி ஒரு சர்ச்சைக்குரிய நபர் தான். அந்த மனிதரை பெரும்பாலானோர் விரும்பியதில்லை. நமக்கு பிடிக்கிறதோ, இல்லையோ சில விஷயங்கள் நடக்கத்தான் செய்யும். அப்படித்தான் இந்த விஷயத்தையும் பார்க்க வேண்டும். இதுதொடர்பாக இளவரசருக்கு எதுவும் தெரியாது. அதை விட்டுவிடுங்கள். நமது விருந்தினரிடம் இப்படிப்பட்ட கேள்விகளை கேட்டு, அவரை தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்க கூடாது” எனக் கூறினார்.

அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகை நிருபர் ஜமால் காஷோகி. இவர் சவுதி அரேபிய அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டி அடிக்கடி செய்தி வெளியிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரகத்தில் வைத்து ஜமால் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலையின் பின்னணியில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version