வெனிசூலாவுக்குள் புகுந்து போதைப் பொருள் கடத்தல்காரர்கள் மீது விரைவில் அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தும் என அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கும், இடதுசாரி அரசு அமைந்துள்ள வெனிசூலா நாட்டுக்கும் பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் கரிபீயன் பகுதியில் அண்மையில் சென்ற படகுகள் மீது அமெரிக்க கடற்படை கப்பல்கள் தாக்குதல் நடத்தின. இதில் 80 பேர் வரை பலியாகினர்.

அந்தப் படகுகள், போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு சொந்தமானவையாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து வெனிசூலா அரசு கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்டோருடன் டிரம்ப் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “வெனிசூலா நாட்டில் வாழும் தீய நபர்கள் மீது அமெரிக்கா விரைவில் தாக்குதலை தொடங்கும். ஏற்கெனவே கடற்பகுதியில் நடத்தினோம். தற்போது நிலத்திலும் தாக்குதல் நடத்தவுள்ளோம். நிலத்தில் தாக்குதல் நடத்துவது மிகவும் எளிதான காரியம். ஏனெனில் அவர்கள் எங்கு வசிக்கிறார்கள் என்பது குறித்து எங்களுக்கு நன்குத் தெரியும்” என்றார்.

வெனிசூலாவில் நிகோலஸ் மடூரோ தலைமையிலான இடதுசாரி அரசு ஆட்சியில் உள்ளது. அமெரிக்காவின் போட்டி நாடுகளாக கருதப்படும் சீனா, ரஷ்யா ஆகியவற்றுடன் வெனிசூலா நெருங்கிய நட்புறவு கொண்டுள்ளது. ஒருவேளை வெனிசூலாவுக்குள் புகுந்து அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அது 2 நாடுகள் இடையேயான போராக மாற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version