மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களை எதிர்கொள்ளத் தங்களுக்குப் போதுமான ராணுவ வலிமை இருப்பதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அடுத்த 6 மாதங்களுக்குத் தொடர்ந்து தீவிரமாகப் போர் புரியத் தேவையான ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் தங்களிடம் கையிருப்பில் உள்ளதாக ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. பிப்ரவரி 28, 2026 அன்று தொடங்கிய “ஆபரேஷன் எபிக் பியூரி” (Operation Epic Fury) மூலம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் ஈரானின் முக்கிய ராணுவ இலக்குகளைத் தாக்கி வரும் நிலையில், ஈரானின் இந்த அறிவிப்பு பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
ஈரான் இதுவரை நடத்திய தாக்குதல்களில் தங்களின் 2-ஆம் மற்றும் 3-ஆம் தலைமுறை ஏவுகணைகளை மட்டுமே பயன்படுத்தியதாகக் கூறியுள்ளது. இனிவரும் நாட்களில் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட, நீண்ட தூரம் பாய்ந்து செல்லக்கூடிய மேம்பட்ட ஏவுகணைகளை ஏவப்போவதாக பாதுகாப்புப் படை செய்தித் தொடர்பாளர் அலி முகமது நைனி தெரிவித்தார். குறிப்பாக, இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை இலக்கு வைத்து இந்த அதிநவீன ஏவுகணைகள் பாயும் எனத் தெரிகிறது. ஈரானின் இந்த ஏவுகணை மிரட்டல், ஏற்கனவே முடங்கியுள்ள சர்வதேச வான்வழிப் போக்குவரத்து மற்றும் கடல்சார் வர்த்தகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
புவிசார் அரசியல் ஆய்வாளர்களின் கருத்துப்படி, இந்தப் போர் எளிதில் முடிவுக்கு வராது எனத் தெரிகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மற்றும் ஏவுகணை உற்பத்தித் தளங்களை முற்றிலுமாக அழிப்பதில் உறுதியாக உள்ளது. அமெரிக்கா பின்வாங்கப் போவதில்லை என்பதால், இந்தப் போர் ஒரு வருடத்திற்கும் மேலாக நீடிக்கக் கூடும் என்று கணிக்கப்படுகிறது. இது உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதாரத்திலும் அதிர்வுகளை உண்டாக்கும் என அஞ்சப்படுகிறது.
முன்னதாக, இஸ்ரேல் மீதும், அமெரிக்காவுக்கு உதவும் வளைகுடா நாடுகள் மீதும் தாக்குதல் நடத்த ஈரான் ஷாஹெத் ரக ட்ரோன்களை பயன்படுத்தி வருகிறது. குறைவான உயரத்தில் பறந்து, இலக்குகளை துல்லியமாக தாக்கும் இந்த வகை ட்ரோன்கள் ரேடாரில் சிக்குவதில்லை. இதை வைத்துதான் ஈரான் ஆட்டம் காட்டி வருகிறது. இந்த ட்ரோன் தொழில்நுட்பத்தை கொடுத்தது ரஷ்யாதான்.
இருந்தபோதிலும் ஈரானை அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து அட்டாக் செய்யும்போது ரஷ்யா, ஈரானுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. ரஷ்யா வரும், ஆட்டம் மாறும் என்று ஈரானும், அதன் ஆதரவு நாடுகளும் எதிர்பார்த்திருந்தன. அப்படி நடக்கவில்லை. இந்நிலையில் இது குறித்து ரஷ்யா தரப்பில் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது.
ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், இது குறித்து கூறுகையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு மத்தியில், ஈரான் ரஷ்யாவிடம் எந்த இராணுவ உதவியையும் கேட்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார். ஈரானிடமிருந்து எந்த ராணுவ உதவி கோரிக்கையும் எங்களுக்கு வரவில்லை என்று கூறிய அவர், எங்கள் நிலைப்பாடு ஏற்கனவே அனைவருக்கும் தெரியும், அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.
