இலங்கையில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இலங்கையில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக மத்திய மாகாணத்தில் தேயிலை அதிகம் பயிரிடப்படும் மலைப் பகுதி மாவட்டமான பதுல்லாவில் 18 பேர் உயிரிழந்ததாக நாட்டின் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. கேகாலை மற்றும் நுவரெல்லா மாவட்டங்களிலும் சிலர் உயிரிழந்தனர். மேலும், இந்த மாவட்டங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் காரணமாக 14 பேர் காணாமல் போயுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் இலங்கை கடுமையான மழையால் பாதிக்கப்பட தொடங்கியதிலிருந்து அந்நாட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. வார இறுதியில் பெய்த கனமழையால் வீடுகள், வயல்கள் மற்றும் சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டது.

இலங்கையின் மலைப்பிரதேச மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளில் பாறைகளும் மரங்களும் தண்டவாளங்களில் விழுந்ததை அடுத்து பல இடங்களில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும், கடும் வெள்ளம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சாலைகள் மூடப்பட்டன.

இலங்கையில் கனமழை காரணமாக 17 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 1,158 குடும்பங்கள் மற்றும் 4,008 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 பேர் காயமடைந்துள்ளதாகவும், மூன்று வீடுகள் முழுமையாகவும், 381 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும், 131 பேர் தற்காலிக பாதுகாப்பான மையங்களில் தங்கைவைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் முதல் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கால் பதுல்லா மாவட்டத்தில் 18 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து கேகாலையில் 7 பேர் மற்றும் நுவரெலியாவில் 4 பேர் உயிரிழந்தனர். அம்பந்தோட்டை மற்றும் குருநாகலில் தலா ஒருவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “இலங்கையில் சமீபத்திய நிலச்சரிவுகள் மற்றும் கனமழையால் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் பெரும் சேதங்கள் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை தெரிவிக்கிறது. இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. இலங்கை மக்களுக்கு எப்போதும் துணையாக நிற்போம்” என்று தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version