வீட்டில் பல விதமான செடிகளும், பூக்களும் நிறைந்த தோட்டத்தை வைத்திருபவர்களுக்கு, குளிர்காலம் ஒரு சவாலான பருவம் தான். கடுமையான குளிர், பனி மற்றும் குறைந்த சூரிய ஒளி ஆகியவை செடிகளின் வளர்ச்சியை பெரிதும் பாதிக்கின்றன. கோடை மற்றும் மழைக்காலத்தில் செழிப்பாக இருந்த செடிகள் கூட, குளிர்காலத்தில் வாடி, காய்ந்து போக ஆரம்பிக்கும்.
ஆனால், சில எளிய மற்றும் சரியான பராமரிப்பு முறைகளைப் பின்பற்றினால், வீட்டில் வளரும் செடிகள் இந்த குளிர்காலத்திலும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். அதுமட்டுமல்லாமல், இனி வரும் பருவ காலத்திலும் செடி செழித்து வளரும். அந்த வகையில், மற்ற காலங்களை போல் இல்லாமல் இந்த குளிர்காலத்தில் செடிகளை எப்படி பராமரிப்பது? செடி வாடிப்போகாமல் இருக்க என்ன செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தண்ணீர் விடுவதில் கவனம்!
- குளிர்காலத்தில் செடி பராமரிப்பில் நீர் நிர்வாகம் மிக முக்கியமானது.
- குளிர்ந்த காலநிலையில், செடிகள் நீரை மெதுவாகவே பயன்படுத்தும். எனவே, கோடை காலத்தை ஒப்பிடும்போது, தண்ணீர் ஊற்றுவதை குறைப்பது அவசியம்.
- செடிக்குத் தண்ணீர் ஊற்றுவதற்கு முன், தொட்டியின் மண்ணை விரலால் தொட்டுப் பார்க்கவும். மேல் மண் நன்கு காய்ந்திருந்தால் மட்டுமே தண்ணீர் விடவும். இது பொதுவாக இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை போதுமானதாக இருக்கும்.
- அதிகப்படியான தண்ணீர் விடுவதால், வேர்களில் ஈரம் தேங்கி, அவை அழுகிப்போகும் அபாயம் உள்ளது. இதைத் தவிர்ப்பது செடியின் ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியம்.
-
சரியான இடம் மற்றும் பாதுகாப்பு!
- செடிகளுக்குத் தேவையான வெப்பம் மற்றும் ஒளியைக் கொடுப்பது அவசியம்.
- முடிந்தவரை செடிகளை அதிக சூரிய ஒளி கிடைக்கும் இடத்தில் குறைந்தது 3 மணி நேரம் வைக்கவும். இது செடியின் வெப்பநிலையைப் பராமரிக்க உதவும்.
- கடுமையான குளிர் அல்லது பனி இருக்கும் இரவு நேரங்களில், தொட்டிச் செடிகளைப் பனியிலிருந்து பாதுகாக்க, வீட்டிற்குள் எடுத்து வைப்பது அல்லது ஒரு கூரை, துணியால் மூடுவது நல்லது. குறிப்பாக துளசி மற்றும் ரோஜா போன்ற மென்மையான செடிகளுக்கு இது மிகவும் அவசியம்.
- செடியின் மண்ணை வெப்பமாக வைத்திருக்க, காய்ந்த இலைகள், வைக்கோல் அல்லது மரச் சில்லுகளை மண்ணின் மேல் பரப்பி (Mulching) மூடி வைக்கலாம். இது மண்ணின் வெப்பநிலையைப் பாதுகாப்பதோடு, ஈரம் ஆவியாவதையும் தடுக்கும்.
உரம் மற்றும் சுத்தம்!
- குளிர்காலத்தில் செடிகளின் வளர்ச்சி குறையும் என்பதால், அதிக உரம் தேவையில்லை.
- குளிர்காலத்தில் செடிகள் ஓய்வு எடுக்கும் என்பதால், அதிகப்படியான உரத்தைத் தவிர்ப்பது நல்லது. குளிர்காலம் தொடங்குவதற்கு முன் ஒருமுறை உரம் இடுவது போதுமானது. வேப்பம் பொடியை மண்ணில் கலந்து விடுவது செடியின் ஆரோக்கியத்துக்கு நல்லது.
- செடியைச் சுற்றியுள்ள களைகள், காய்ந்த இலைகள் மற்றும் பூக்களை அவ்வப்போது நீக்குவது, செடிக்குச் சரியான சத்துக்கள் கிடைக்க உதவும்.
- செடிகளின் வேர்களுக்குப் போதுமான ஆக்ஸிஜன் கிடைக்க, குளிர்காலம் தொடங்கும் முன் பழைய மண்ணை மாற்றி, புதிய மண்ணைக் கலப்பது செடி செழித்து வளர உதவும். இப்படி சரியான பாதுகாப்பு அளிப்பதன் மூலம், செடிகள் இந்தக் குளிர்கால சவாலை சமாளித்து, அடுத்த பருவத்தில் புதிய இலைகள் மற்றும் பூக்களுடன் அழகாகக் காட்சி அளிக்கும்.
