கணையம் (Pancreas) என்பது வயிற்றுக்குப் பின்னால், கல்லீரல் மற்றும் பித்தப்பைக்கு அடுத்ததாக அமைந்துள்ள ஒரு சுரப்பியாகும். இந்த சுரப்பி செரிமானத்திற்குத் தேவையான நொதிகளையும், ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் ஹார்மோன்களையும் உற்பத்தி செய்கிறது. இது உடலில் ஒரு முக்கியமான உறுப்பு என்பதால், கணையத்திற்கு ஏற்படும் எந்தவொரு சேதமும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கும். இந்த நிலை pancreatitis என்றழைக்கப்படுகிறது.

அதை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சையளிக்கத் தவறினால் கணையத்தில் கடுமையான பிரச்சனைகள் ஏற்படலாம். இது கணைய அழற்சி, நீரிழிவு மற்றும் கணைய புற்றுநோய் போன்ற ஆபத்தான நிலைமைகளுக்கு வழிவகுக்கும். உடல் சில ஆரம்ப அறிகுறிகளைக் கொடுத்தாலும், கணையம் தொடர்பான நோய்கள் பெரும்பாலும் மற்ற நிலைமைகளுடன் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்றன. இதனால் என்ன பிரச்சனை என்பதை கண்டறிய தாமதமாகும். கணையத்தில் பிரச்சனை ஏற்பட்டால் உடலில் ஏற்படும் மாற்றங்களையும் அறிகுறிகளையும் பார்க்கலாம்.

முதுகு வரை பரவும் வயிற்று வலி: கணைய செயலிழப்பின் மிகவும் பொதுவான அறிகுறிகளில் ஒன்று தான் முதுகு வரை பரவும் வயிற்று வலி. அதுவும் குறிப்பாக மேல் வயிற்றில் ஏற்படும் வலி. சாப்பிட்ட பிறகு அல்லது தண்ணீர் குடித்த பிறகு வலி மோசமாகி முதுகு வரை ஏதோ கூர்மையான பொருள் குத்துவது போல் வலி ஏற்படும். கணையம் வீக்கமடைந்திருப்பதற்கான முக்கிய அறிகுறி இது.

இதனை சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சையளிக்காவிட்டால், அது நாள்பட்ட வீக்கம் மற்றும் நீண்டகால சேதத்திற்கு வழிவகுக்கும். எனவே, சாப்பிட்ட பிறகு கடுமையான மற்றும் தொடர்ச்சியான வயிற்று வலியை அனுபவித்தால், அதை புறக்கணிக்க கூடாது.

எடை இழப்பு: எதிர்பாராத எடை இழப்பு மற்றும் பசியின்மை ஆகியவை கணைய செயலிழப்பின் பிற அறிகுறிகளாகும். கணையம் போதுமான செரிமான நொதிகளை உற்பத்தி செய்யத் தவறி, ஊட்டச்சத்துக்களை திறம்பட உறிஞ்ச முடியாமல் போவதால் இது நிகழ்கிறது. எடை இழப்புடன், வயிற்றுப்போக்கு, ரத்த சோகை போன்ற அறிகுறிகளும் பொதுவானவை. இந்த நிலை ஸ்டீட்டோரியா என்று அழைக்கப்படுகிறது. கொழுப்பு திறம்பட ஜீரணிக்கப்படவில்லை என்பதற்கான மற்றொரு அறிகுறி இது. ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச இயலாமை சோர்வு, பலவீனம் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்களின் குறைபாடுகளையும் ஏற்படுத்தும்.

குமட்டல் மற்றும் வாந்தி: நாள்பட்ட குமட்டல், வாந்தி மற்றும் வீக்கம் ஆகியவை கணைய செயலிழப்பின் பிற அறிகுறிகளாகும். சீரான செரிமானத்தில் கணையம் முக்கிய பங்கு வகிக்கிறது. கணையத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், செரிமான செயல்முறை மெதுவாகவோ அல்லது சீராக நடக்காமல் போகலாம்.

சிறிதளவு உணவை சாப்பிட்ட பிறகும், வயிறு கனமாகவோ அல்லது நிரம்பியதாகவோ உணரலாம். இது அமில ரிஃப்ளக்ஸ் மற்றும் இரைப்பை அழற்சி போன்ற நிலைமைகளின் அறிகுறியாக இருக்கலாம் என நினைக்கக்கூடாது. எனவே, அடிக்கடி அஜீரணம், விவரிக்கப்படாத எடை இழப்பு மற்றும் முதுகுவலி போன்ற அறிகுறிகளை எதிர்கொண்டால் மருத்துவ உதவி பெற வேண்டும்.

ரத்த சர்க்கரை அளவில் மாற்றம்: கணையம் இன்சுலினை சரியாக உற்பத்தி செய்ய முடியாதபோது ரத்த சர்க்கரை ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது. இது சோர்வு, தாகம், வழக்கத்திற்கு அதிகமாக சிறுநீர் கழிப்பது மற்றும் ஆற்றல் குறைவை ஏற்படுத்தும். ரத்த சர்க்கரையில் அடிக்கடி ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும்.

கணையத்தில் ஏற்படும் ஏதேனும் பிரச்சனைகள் இன்சுலின் உற்பத்தியில் தலையிடலாம் மற்றும் ரத்த சர்க்கரை அளவுகளில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தும் என்று தேசிய நீரிழிவு மற்றும் செரிமான மற்றும் சிறுநீரக நோய்கள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மஞ்சள் காமாலை: கணையத்தில் பிரச்சனை இருப்பதை குறிக்கும் மற்றொரு அறிகுறி மஞ்சள் காமாலை. பித்த நாளத்தில் ஏற்படும் அடைப்பு, பித்தத்தின் இயல்பான ஓட்டத்தைத் தடுத்து, உடல் முழுவதும் மஞ்சள் நிறமி பிலிரூபின் குவியச் செய்யும். இது கணைய அடைப்பு மற்றும் கணையப் புற்றுநோய் போன்ற நிலைமைகளின் அறிகுறியாகும். மஞ்சள் காமாலையுடன், சிறுநீர் மற்றும் மலத்தின் நிறமாற்றம் மற்றும் தோல் அரிப்பு ஆகிய பிரச்சனைகள் ஏற்படும்.

கணையப் பிரச்சனைகளுக்கான காரணங்கள்:

  • அதிகப்படியான குடிப்பழக்கம்
  • பித்தப்பைக் கற்கள்
  • அதிக ட்ரைகிளிசரைடு அளவுகள்
  • புகைபிடித்தல்
  • மரபணு காரணிகள்
  • வைரஸ் தொற்றுகள்
  • மோசமான உணவுமுறை
Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version