மறைந்த முன்னாள் முதல்வர், திமுக தலைவர் மு.கருணாநிதியின் 7-ம் ஆண்டு நினைவு தினம் இன்று. இந்திய அரசியல் ஆளுமைகளுள் ஆகச்சிறந்தவர் என கூறலாம். ஆழ்ந்த அரசியல் ஞானம் கொண்ட இவரை முத்தமிழறிஞர், கலைஞர், மு.க என்ற அடைமொழிகளைக் கொண்டே பலர் அழைப்பது வழக்கம். அரசியலில் விமர்சிப்பவர்களை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிபவர்கள் மத்தியில், தன்னை விமர்சிப்பவர் வாயடைத்து போகும் வகையில் பதில் அளிப்பதில் கலைஞர் வல்லவர். ஏழை மக்களால் பெரிதும் விரும்பப்பட்டும், அதே சமயத்தில் ஒரு தரப்பால் வெறுக்கப்பட்ட நபரும் இவரே. பேட் மேன் படத்தில் ஒரு வசனம் உண்டு, ஒன்று நீங்கள் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாயகனாக மரணிக்க வேண்டும், இல்லையென்றால் உங்களை நீங்களே வில்லனாக பார்க்கும் அளவுக்கு வாழவேண்டும் என்று. அந்த வசனம் கலைஞரின் வாழ்வுக்கு கச்சிதமாக பொருந்தும்.
கருணாநிதியை இகழ்வதற்கோ, புகழ்வதற்கோ அல்ல இந்த பதிவு. ஒருவேளை மு.கருணாநிதி என்று ஒருவர் இல்லை என்றால் நாம் எதை எல்லாம் பெற்றிருக்க மாட்டோம் என்பதற்கே இந்த பதிவு. தான் போட்டியிட்ட முதல் தேர்தல் முதல் கடைசி தேர்தல் வரை தோல்வியையே சந்திக்காமல் 13 முறை வெற்றி பெற்றிருக்கிறார். 1984-ல் மட்டும் அவர் தேர்தலில் நிற்கவில்லை. கலைஞரை போல் தோல்வியை கண்டவனும் இல்லை, அவரை போல் அதில் இருந்து மீண்டு வந்து வென்றவனும் இல்லை. சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், முதலமைச்சர் என படிப்படியாக உயர்ந்த அவர், கை ரிக்சாவை ஒழித்தது, பிச்சைக்காரர்களுக்கென விடுதி அமைத்தது, சமத்துவபுரங்களை அமைத்தது, டைடல் பார்க் கொண்டு வந்தது என ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தார். பொறியியல் படிப்புகள் ஏழை மாணவர்களுக்கு எட்டாக் கனியாக இருந்த போது அதற்கான கதவுகளை திறந்து விட்டார். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, 33 சதவீதம் இட ஒதுக்கீடு, சேலம் உருக்காலை, சிட்கோ, சிப்காட் தொழில் வளாகங்கள், கிராமங்களுக்கு சாலை வசதி, சிற்றுந்து வசதி, கைம்பெண் மறுமண உதவித்தொகை, வீடு கட்டும் திட்டம், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டம், தமிழில் படித்தவர்களுக்கு வேலையில் முன்னுரிமை போன்ற எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தார்.
முக்கியமாக தமிழுக்கு செம்மொழி அந்தஸ்த்து பெற்றது, மெட்ரோ திட்டம் கொண்டு வந்தது, காப்பீட்டு திட்டம் என இன்னும் பலவற்றை செய்திருக்கிறார். இலவச திட்டங்களை அறிமுகப்படுத்தியதாக கலைஞர் மீது விமர்சனம் இருந்தாலும், இல்லாதவனுக்கே அதன் அருமை புரியும் என தெரிந்து விமர்சனங்களை புறந்தள்ளியவர் அவர்.
கலைஞர் கருணாநிதி என்ன செய்தார் என கேட்போர், கொஞ்சம் அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு விளிம்பு நிலையில் உள்ள பாமர மக்களிடம் பேச்சுக் கொடுத்து பாருங்கள், அவர்கள் அன்றாட பணியில் எங்காவது தனது திட்டத்தின் மூலம் கலைஞர் சிரித்துக் கொண்டிருப்பதை காண முடியும். கருணாநிதியை சுயநலவாதி என கருதுவோர் பலர், ஆம் அவர் சுயநலவாதி தான். பாமர மக்கள் நன்றாக வாழ வேண்டும் என நினைத்த சுயநலவாதி. தமிழ் தான் தனது மூச்சு என பாடுபட்ட சுயநலவாதி. ஆனால் அவரது உடன்பிறப்புகளுக்கு, கலைஞரின் நினைவிடத்தில் எழுதியது போல ஓய்வெடுக்காமல் உழைத்த ஒரு சூரியன். நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருங்கள், ஒருவேளை நீங்கள் பிற மாநிலங்களுக்கு பயணிக்கும் போது உங்களுக்குள் தமிழ்நாட்டில் பிறந்ததற்காக கர்வம் கொண்டீர்கள் என்றால், அதற்கு காரணமான தலைவர்களில் இந்த கருணாநிதி முதன்மையானவராக இருப்பார். நினைவில் வையுங்கள் திமுக இருக்கும் வரை இந்த மு.க-வும் மக்கள் மனதில் நீங்காமல் இருப்பார் என்பதை மறவாதீர்கள்..
