பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறக்கி சுத்தம் செய்வது சட்டவிரோதமும் மனிதாபிமானமற்ற செயலாகும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறக்கி சுத்தம் செய்வது சட்டவிரோதமும் மனிதாபிமானமற்ற செயலாகும். இதற்கு தடை விதிக்கும் சட்டம் (2013) இருந்தபோதிலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி திருவெறும்பூர் அருகே கார்மல் கார்டன் பகுதியில் பாதாள சாக்கடையில் இறங்கிய ரவி (30), பிரபு (32) என்ற இரண்டு இளைஞர்கள் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.

இந்தக் கொடூரமான மரணத்திற்கு, பாதுகாப்பு ஏற்பாடுகளை பின்பற்றத் தவறியவர்கள் முழுப்பொறுப்பேற்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இப்பணிகளை மேற்கொண்டவர்கள் உரிய இழப்பீடு உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

கடந்த 2023 ஆண்டு மேமாதம், கழிவுநீர்த் தொட்டிகள் மற்றும் பாதாளச் சாக்கடைகளில் ஏற்படும் இறப்புகளை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அதில் இனி வருங்காலங்களில், தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறி, அதன் வாயிலாக. இறப்புகள் நேருமானால் அதற்குக் காரணமான அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

எனவே, இனிவரும்காலங்களில் ஒருவரும் சாக்கடைக்குள் இறங்கி உயிரிழக்காத வகையில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் இயந்திரங்களை மட்டுமே பயன்படுத்தும் நடைமுறையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். இதை மீறுபவர்களுக்கு கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வலியுறுத்துகிறேன்.

Share.
Leave A Reply

Exit mobile version