மிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மிகப்பெரிய அரசியல் அதிர்வை ஏற்படுத்தியுள்ளன. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால், 234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை தவெக தனியாகப் பெறவில்லை. இதனால், அடுத்த ஆட்சியை யார் அமைப்பார்கள் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தச் சூழலில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்,  தற்போது தமிழக அரசியலின் “கேம் சேஞ்சர்” ஆக மாறியுள்ளார். ஏற்கனவே காங்கிரஸ் கட்சி தனது 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவை தவெகவுக்கு வழங்க சம்மதித்திருந்த நிலையில், ஆட்சியமைப்பதற்குத் தேவையான கூடுதல் எண்ணிக்கையை உறுதி செய்வதில் விசிக, சிபிஐ, சிபிஎம் மற்றும் ஐ.யு.எம்.எல் கட்சிகளின் ஆதரவு தீர்மானிக்கும் காரணியாக மாறியது.

விஜய் நேரடியாக திருமாவளவனைத் தொடர்புகொண்டு ஆதரவு கோரியதைத் தொடர்ந்து திருமாவளவன், இடதுசாரி கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி, தவெகவுக்கு ஆதரவு அளிக்கும் முடிவை நோக்கி நகர்ந்ததாக தகவல்கள் வெளியாகின. ஆட்சியில் பங்கு, கொள்கை ஒருங்கிணைப்பு, சமூகநீதி தொடர்பான உறுதிமொழிகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இரு தரப்புக்கும் இடையே முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

உண்மையில், இந்த அரசியல் அணுக்கம் தேர்தலுக்குப் பிறகு திடீரென உருவானதல்ல. விஜய் தவெகவைத் தொடங்கிய ஆரம்ப கட்டத்திலேயே திருமாவளவனுக்கு கூட்டணிக்கான அழைப்பை விடுத்திருந்தார். “ஆட்சி அதிகாரத்தில் பங்கு” என்ற புதிய அரசியல் கோஷத்தையும் அப்போது முன்வைத்தார். தமிழக அரசியலில் நீண்ட காலமாக நிலவி வந்த “தேர்தல் கூட்டணி மட்டும்” என்ற அணுகுமுறையை மாற்றி, அதிகாரப் பகிர்வு அரசியலை முன்னிறுத்தும் முயற்சியாக அது பார்க்கப்பட்டது.

ஆனால், அப்போது திமுக கூட்டணியில் இருந்து வெளியேற விசிக தயக்கம் காட்டியது. கூட்டணிக்குள் இருந்தபடியே தனது அரசியல் அடையாளத்தையும் சமூகநீதி அரசியலையும் பாதுகாப்பதே திருமாவளவனின் திட்டமாக இருந்ததாக அரசியல் விமர்சகர்கள் கருதினர். இதே நேரத்தில், விசிகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, “விசிகவில் நிர்வாகிகள் மட்டுமே உள்ளனர்; அடிப்படை தொண்டர்கள் பெரும்பாலும் விஜய்க்கு ஆதரவாக உள்ளனர்” என்று விமர்சித்திருந்தார். இந்த கருத்து அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

மற்றொரு பக்கம், திமுக கூட்டணியை பலவீனப்படுத்தும் நோக்கில், விசிகவை தங்கள் அணிக்குள் கொண்டு வர அதிமுக தரப்பும் முயற்சி மேற்கொண்டதாக தகவல்கள் வெளியானது. விசிக வெளியேறினால், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் திமுக மீது அழுத்தம் கொடுக்கும்; அதன் மூலம் கூட்டணியில் பிளவு ஏற்படும் என்ற அரசியல் கணக்கீடு அதிமுக தரப்பில் இருந்ததாக கூறப்பட்டது. ஆனால், திருமாவளவன் கடைசி வரை திமுக கூட்டணியிலேயே நீடித்ததால் அந்த முயற்சியும் பலனளிக்கவில்லை.

அரசியல் பார்வையாளர்களின் கருத்துப்படி, அப்போது திருமாவளவன் தவெக அழைப்பை ஏற்றிருந்தால், தமிழக அரசியலின் கூட்டணி வரைபடமே மாறியிருக்கும். இடதுசாரிகள், காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளும் தவெக அணிக்கு நகர்ந்திருக்க வாய்ப்பு இருந்ததாக கூறப்படுகிறது. அப்படி நடந்திருந்தால், தேர்தலுக்கு முன்பே திருமாவளவன் “கேம் சேஞ்சர்” என்ற அரசியல் அந்தஸ்தைப் பெற்றிருப்பார்.

ஆனால், தேர்தலுக்குப் பிறகு அந்த நிலை மீண்டும் உருவாகியுள்ளது. 108 இடங்களுடன் மிகப்பெரிய கட்சியாக இருந்தபோதிலும், பெரும்பான்மை இல்லாததால் தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த சூழலில், ஆளுநர் உடனடியாக விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று திருமாவளவன் வெளிப்படையாக கருத்து தெரிவித்தார். “சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்” என்ற அவரது நிலைப்பாடு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றது.

இதனைத் தொடர்ந்து, விஜய் அவருக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பி ஆதரவு கோரியதாக தகவல்கள் வெளியாகின. பின்னர், கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாட்டை கருத்தில் கொண்டு விசிக தனது முடிவை அறிவிக்கும் என திருமாவளவன் தெரிவித்தார். அதன்பின் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், தவெகவுக்கு ஆதரவு அளிக்கும் முடிவை விசிக எடுத்ததாக கூறப்படுகிறது.

இதற்கு முன்பாகவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக அறிவித்திருந்தன. அந்த முடிவுக்கும் திருமாவளவனின் ஆலோசனைகளே பின்னணியாக இருந்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

நாளை பதவியேற்பு

இதனுடன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ( IUML) தனது 2 எம்.எல்.ஏக்களின் ஆதரவையும் தவெகவுக்கு வழங்கியதால், ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 120-ஐ எட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து, விஜய் இன்று மாலை ஆளுநர் விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். இந்த நிலையில், சனிக்கிழமை காலை சென்னை நேரு ஸ்டேடியத்தில் விஜய் தமிழக முதலமைச்சராக பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், விசிக ஆதரவுக்குப் பின்னணியில் பல அரசியல் காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, இந்தத் தேர்தலில் தலித் மற்றும் இளைஞர் வாக்குகளில் தவெக கணிசமான ஆதரவைப் பெற்றதாக மதிப்பிடப்படுகிறது. சமூகநீதி, மதச்சார்பின்மை, சாதி ஒழிப்பு போன்ற விவகாரங்களில் தவெக எடுத்த நிலைப்பாடுகளும் விசிகவின் அரசியல் கோட்பாடுகளுடன் ஒத்துப்போகும் வகையில் இருந்ததாக கூறப்படுகிறது.

அதிமுக-திமுக இணைந்து தவெக ஆட்சியமைப்பதைத் தடுக்க முயல்கின்றன என்ற அரசியல் எண்ணமும், இடதுசாரிகளுடன் இணைந்து புதிய அரசியல் சமநிலையை உருவாக்க வேண்டும் என்ற விருப்பமும் திருமாவளவனின் முடிவில் தாக்கம் செலுத்தியதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அந்த வகையில், தேர்தலுக்கு முன் தவறவிட்ட அரசியல் தருணத்தை, தேர்தலுக்குப் பின் முழுமையாக தனது கையில் எடுத்துள்ளார் திருமாவளவன். இன்று விஜய் ஆட்சியமைப்பாரா இல்லையா என்பதை தீர்மானிக்கும் மையப் புள்ளியாக அவர் மாறியுள்ளார். தமிழக அரசியலின் அடுத்த அத்தியாயத்தை எழுதும் சக்தியாக தற்போது திருமாவளவன் உருவெடுத்திருப்பது தான் இந்தத் தேர்தலின் மிகப்பெரிய அரசியல் திருப்பமாக பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version