எ.வ.வேலு வீட்டில் கைப்பற்றப்பட்ட சூட்கேஸில் இருந்த ஆவணங்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திமுக ஆட்சிக் காலத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த எ.வ.வேலு தொடர்பாக, அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையின் சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணை மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில், பணிகள் நிறைவேறுவதற்கு முன்பே பல கோடி ரூபாய் மதிப்பிலான நிதி ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக நேற்று 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 120B, 409, 420, 468, 471 r/w 109 ஆகிய பிரிவுகள் மற்றும் 1988-ம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் 7(c), 13(2) r/w 13(1)(a) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு புலனாய்வு பிரிவு டிஎஸ்பி பாஸ்கரன் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வேலுவின் இல்லத்திலும்  சோதனை மற்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். சோதனையின்போது வீட்டில் இருந்த ஒரு சூட்கேஸ் மற்றும் அதில் இருந்த ஆவணங்கள் குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. காலை தொடங்கிய சோதனை 8 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து எ.வ.வேலுவிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையில், ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், திமுக வழக்கறிஞர் சரவணன் அண்ணாதுரை அதிகாரிகளின் அனுமதியுடன் உள்ளே சென்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முறையான சோதனையே நடைபெற்று வருகிறது. ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு இதுபோன்ற வழக்குகள் பதிவு செய்யப்படுவது வழக்கமான ஒன்று. எந்த வழக்காக இருந்தாலும் இறுதியில் நீதிமன்றம்தான் முடிவு எடுக்கும். அதனை சட்ட ரீதியாக எதிர்கொள்ள திமுக தயாராக உள்ளது” என்றார்.

அதேபோல், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எ.வ.வேலுவை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. இதுபோன்ற சோதனைகளை திமுக பலமுறை சந்தித்துள்ளது. சட்ட ரீதியாக இந்த வழக்குகளை எதிர்கொள்வோம். ‘It’s all in the game'” என்று தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version