கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் அந்த ஒரு மனிதருடைய தவறு மட்டுமல்ல. நம் அனைவருக்குமே இதில் பங்கிருக்கிறது என நடிகர் அஜித்குமார் பேசியுள்ளார்.
நடிப்பை தாண்டி கார் ரேஸிங்கில் பங்கேற்றுவரும் அஜித், ‘தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியா’வுக்கு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில் பேசிய அஜித் “கரூர் கூட்ட நெரிசலுக்கு அனைவருக்குமே பங்கிருக்கிறது” என்று குறிப்பிட்டார்.
அதாவது, “கரூர் கூட்ட நெரிசல் பிரச்னைக்கு அந்த ஒரு தனிப்பட்ட நபர் மட்டுமே பொறுப்பு கிடையாது. நாம் அனைவருமே பொறுப்புதான். முக்கியமாக ஊடகங்களுக்கும் இதில் பங்கிருக்கிறது. கூட்டத்தைக் கூட்டி செல்வாக்கைக் காட்டும் ஒரு சமுதாயமாக நாம் மாறிவிட்டோம்
இது போன்ற சம்பவங்கள் ஏன் ஒரு கிரிக்கெட் போட்டியில் நடப்பதில்லை? ஆனால் திரையரங்குகளில் நடக்கிறது. பிரபலங்கள், திரைத்துறையினர் கலந்துகொள்ளும் இடங்களில் மட்டும் ஏன் நடக்கிறது. இது திரைத்துறை மீதே தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தும். கரூர் அந்த ஒரு தனி நபருடைய தவறல்ல. நான் உள்பட நாம் அனைவருமே இதற்கு பொறுப்புதான். கூட்டம் கூட்டுவதில் இருக்கும் மோகத்தில் இருந்து நாம் விலக வேண்டும். 140 கோடி மக்கள் வாழும் இந்த நாட்டில் கூட்டம் கூட்டுவது ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயம் இல்லை. அதை வைத்து நம் செல்வாக்கை காட்டத் தேவையில்லை” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “நாங்கள் குடும்பத்தை பிரிந்து, தூக்கத்தை இழந்து, அடிபட்டு, காயம்பட்டு, மன உளைச்சலுக்கு ஆளாகி படங்களை உருவாக்குவது ஏன்? எல்லாம் மக்களின் அந்த அன்புக்காகத்தான் ஆனால், அதைக் காட்ட பல்வேறு வழிகள் உள்ளன எனவும் கூறியுள்ளார்.
கடந்த செப்டம்பர் 27ம் தேதி கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பரப்புரை செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் பெரிய பேசுபொருளா ஆன நிலையில் அஜித்குமார் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
