கரூர் – கோவை சாலையில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என அதிமுக சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக கரூர் மாவட்ட அவைத்தலைவர் திருவிக என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதன் விவரம் வருமாறு..

அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கரூர் மாவட்டத்தில் வருகின்ற 25ஆம் தேதி மற்றும் 26 ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களில் கரூர் அரவக்குறிச்சி கிருஷ்ணாயபுரம் மற்றும் குளித்தலை தொகுதிகளில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்கின்ற சுற்றுப்பயணம் மற்றும் பொதுக்கூட்ட நிகழ்வு நடத்த வருகை தர உள்ளார்.

25 ஆம் தேதி இரவு 7 மணி அளவில் கரூர் கோவை சாலை பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது இதற்காக காவல்துறை அனுமதி கோரி கடந்த 9ஆம் தேதி மனு அளித்தோம். பொதுக்கூட்டம் நடத்துவது குறித்து காவல்துறை தரப்பில் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியிருந்தனர். அதற்கும் முறையான பதில் அளித்தும் இதுவரை அனுமதி வழங்கவில்லை. எனவே வருகிற 25ஆம் தேதி கரூர் கோவை சாலையில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்க உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி சுந்தர் மோகன் முன் விசாரணைக்கு வந்தது.மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராகி சம்பந்தப்பட்ட இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி விண்ணப்பித்தோம். ஆனால் அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் உள்ளது என கூறி அனுமதி தர காவல்துறை மறுக்கிறது. ஆனால் அதே இடத்தில் வேறு அரசியல் கட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

அப்போது அரசு தரப்பில் மனுதாரர் பொதுக்கூட்டம் நடத்த மாற்று இடம் வழங்க தயாராக உள்ளதாகவும், பொதுக்கூட்டம் எந்த இடங்களில் நடத்தப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வழிகாட்டுதல் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட பகுதி போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதி என்பதாலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது மாற்று இடம் அனுமதி வழங்க தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அப்பொழுது நீதிபதி மனுதாரர் சம்பந்தப்பட்ட இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி புதிய மனுவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் வழங்க வேண்டும் அந்த மனு மீது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உரிய உத்தரவை 22ஆம் தேதி மழைக்குள் பிறப்பிக்க வேண்டும் என கூறி வழக்கை முடித்து வைத்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version