மதுரை மாநகராட்சியின் நிர்வாக சீர்கேடுகளைக் கண்டித்தும், முறைகேடான வரி விதிப்பில் சுமார் 200 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருப்பது குறித்து முறையான விசாரணை நடைபெறாததைக் கண்டித்தும் டிச.17 அன்று மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக அதிமுக அறிவித்துள்ளது.

இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக அரசு பொறுப்பேற்று கடந்த 55 மாதங்களாக, மதுரை மாநகரில் ஜெயலலிதா ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு புதிய திட்டங்களும் ஸ்டிக்கர் ஒட்டி திறந்ததைத் தவிர எந்தவிதமான திட்டங்களும் கொண்டு வரப்படவில்லை. குறிப்பாக, மதுரை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான முன்மொழிவைக்கூட இந்த திமுக அரசு முழுமையாக வழங்கவில்லை.

வீடுகளுக்கு 100 சதவீத வரி உயர்வு, வணிக நிறுவனங்களுக்கு 150 சதவீத வரி உயர்வு மற்றும் குடிநீர் கட்டணம், குப்பை வரி ஆகியவற்றின் உயர்வால், மதுரை மாநகராட்சியின் வரி வருவாய் பலமடங்கு உயர்ந்தும், திமுக ஆட்சியில் மதுரை மாநகரில் அனைத்து வட்டங்களிலும் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாகக் காட்சி அளிக்கின்றன; சாலைகளில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது.

மதுரை மாநகர மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் அதிமுகவால் அடிக்கல் நாட்டப்பட்டு, தொடங்கப்பட்ட முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் பணிகள் முழுமையாக முடிவடையும் முன்பே, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத் தேர்தலை மனதில் வைத்து, முதல்வர் ஸ்டாலின், கடந்த வாரம் இத்திட்டத்தை அவசர கதியில் தொடங்கி வைத்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version