பாமகவில் உட்கட்சி பூசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தந்தை, மகனுக்கு இடையிலான கருத்து மோதலால், கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அன்புமணியின் ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கி புதிய நிர்வாகிகளை ராமதாஸ் நியமித்து வருகிறார். எனது உயிர்மூச்சு இருக்கும் வரை நான் தான் கட்சியின் தலைவர் என சில தினங்களுக்கு முன்பு ராமதாஸ் கூறியிருந்தார்.
புதிய நிர்வாகிகளுடன் தைலாபுரத்தில் ஆலோசனை மேற்கொண்ட ராமதாஸ், பாமகவின் பொதுச்செயலாளராக இருந்த வடிவேலு ராவணனை நீக்கி, புதிதாக முரளி சங்கர் என்பவரை நியமித்தார். இந்த நிலையில், திருவள்ளூர் மணவாள நகரில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் வழக்கறிஞர் பாலு, திலகபாமா, மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி, திருவள்ளூரில் முப்போகம் விளையும் 1,200 ஏக்கர் நிலத்தை பறித்து அமெரிக்க நிறுவனத்திற்கு தாரைவார்க்க திமுக அரசு துடிக்கிறது. ஏன் அந்த அமெரிக்க நிறுவனத்திற்கு தரிசு நிலம் அதிகம் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலத்தை திமுக அரசு ஒதுக்கலாமே?. திமுக ஆட்சி முடிவுக்கான கவுன்டவுன் இன்று முதல் தொடங்கிவிட்டது.
சமூகநீதிக்காக பாமகவை தொடங்கிய ராமதாஸ் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார். சமூகநீதி பற்றி பேச முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிகாரம் இல்லை. சமூகநீதியின் துரோகி திமுக. கட்சியில் உறுப்பினர் சேர்க்கையை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும். 2026ல் பாமக அங்கம் வகிக்கும் கூட்டணிதான் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும். அதற்காக தொண்டர்கள் பாடுபட வேண்டும். தமிழகத்தை ஆள தகுதியான ஒரே கட்சி பாமக.
ராமதாசுக்கு தந்தையர் தின வாழ்த்துகள். என் மீது ஏதும் கோபம் இருந்தால் ஐயா ராமதாஸ் என்னை மன்னித்து விடுங்கள். தந்தையிடம் மன்னிப்பு கேட்பது ஒன்றும் பெரிதல்ல. ராமதாஸ் ஐயா நீண்ட ஆயுளுடன், 100 ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். தேசிய தலைவர்; நாட்டின் மூத்த அரசியல் தலைவர் ராமதாஸ்.
1163212ராமதாஸ் ஐயா டென்ஷன் ஆக வேண்டாம். வருத்தப்படாதீர்கள், நீங்கள் உருவாக்கிய கட்சி இது; நீங்கள் கோபப்படக்கூடாது. கடினமான காலங்களை கடந்து வந்தவர், பல தியாகங்களை செய்தவர் ராமதாஸ். என்ன செய்ய வேண்டும் என கூறுங்கள்; மகனாக நான் செய்கிறேன். என்று கூறினார்.
