வேலையில்லாத இளைஞர்களின் வெகுண்டெழுந்த கோபத்தின் வெளிப்பாடாக தற்போது இணையம் முழுவதும் “காக்ரோச் ஜனதா பார்ட்டி” (Cockroach Janata Party – CJP) என்ற பெயரில் ஒரு புதிய அரசியல் அலை உருவாகி உள்ளது.
அண்மையில் நீதிமன்ற நிகழ்வு ஒன்றில், வேலை வாய்ப்பு மற்றும் இளைஞர்களின் தற்போதைய நிலை குறித்த விவாதத்தின் போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த் தெரிவித்த கருத்து இளைஞர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இளைஞர்கள் தகுதிக்கேற்ற வேலை கிடைக்கவில்லை என்று புலம்புவதை விட்டுவிட்டு, கிடைக்கும் வேலைகளைச் செய்ய முன்வர வேண்டும் என்ற தொனியில் அமைந்த அந்த கருத்து, பல மில்லியன் இளைஞர்களின் சுயமரியாதையைச் சீண்டியதாகக் கருதப்படுகிறது.
நீதிபதியன் கருத்து சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்த சில மணி நேரங்களிலேயே, இளைஞர்கள் அதற்கு எதிர்வினையாக ஒரு போராட்ட வடிவை எடுத்தனர்.
சமூகப் பிரச்சனைகள், வேலையில்லாத் திண்டாட்டம், அரசுத் தேர்வுகளில் நிலவும் குளறுபடிகள், படித்த இளைஞர்கள் எதிர்கொள்ளும் அவலங்கள் குறித்து சட்ட ரீதியாகவும், அரசியல் நையாண்டியாகவும் குரல் எழுப்பும் ஒரு தளமாக இணையத்தில் “காக்ரோச் ஜனதா பார்ட்டி” (Cockroach Janata Party – CJP) என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கத்தை உருவாக்கி அடையாளப்படுத்திக் கொண்டனர்.
வேலையில்லாத இளைஞர்களான நாங்கள் எங்கு சென்றாலும் நிராகரிக்கப்படுவதாகவும், கரப்பான் பூச்சிகளைப் போல தங்களை எவரும் மதிப்பதில்லை என்பதையும் உணர்த்தும் விதமாக “காக்ரோச் ஜனதா பார்ட்டி” (Cockroach Janata Party – CJP) என்ற பக்கத்தை உருவாக்கி உள்ளனர்.
சமூக வலைதளங்களில் அரசியல் விமர்சனங்களை முன்வைப்பதில் அறியப்பட்ட மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அபிஜித் போன்ற இளைஞர்களால் முன்னெடுக்கப்படும் இந்த இன்ஸ்டாகிராம் பக்கம் தற்போது பல இளைஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதனிடையே தனது கருத்து விமர்சனத்திற்குள்ளானதையடுத்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த் ஒரு விளக்கத்தை வெளியிட்டார். அதில், தனது கருத்துக்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகவும், ஒட்டுமொத்த இந்திய இளைஞர்களையும் விமர்சிக்கவில்லை என்றும், போலியான பட்டங்களைப் பயன்படுத்தித் தொழிலுக்குள் நுழையும் நபர்களைக் குறித்தே அவ்வாறு பேசியதாகவும் அவர் விளக்கம் அளித்தார். இந்திய இளைஞர்கள் தான் வளர்ந்த இந்தியாவின் தூண்கள் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும், #CJP, #CockroachJanataParty, #UnemployedYouth என்ற ஹேஷ்டேக்குகள் தேசிய அளவில் ட்ரெண்டிங் ஆயின. வேலையில்லாத பொறியாளர்கள், பட்டதாரிகள், முனைவர் பட்டம் பெற்றவர்கள் எனப் பலரும் தங்கள் தகுதியைச் சான்றிதழ்களுடன் பதிவிட்டனர்.
சாதி, மதம், மொழி கடந்து, ‘வேலை’ என்ற ஒற்றைப் புள்ளியில் லட்சக்கணக்கான இளைஞர்கள் ஒன்றிணைந்துள்ளனர். இது ஒரு ‘அமைதியான ஆனால் வலிமையான’ சமூக அரசியல் மாற்றத்திற்கான அறிகுறியாகக் கருதப்படுகிறது.
