நாட்டின் வேலையில்லாத இளைஞர்களை கரப்பான்பூச்சிகள் என உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் குறிப்பிட்டதாகக் கூறப்படும் நிலையில், அதை பகடி செய்யும் விதமாக உருவாக்கப்பட்ட ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ என்ற எக்ஸ் பக்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்பிக்களான மஹுவா மொய்த்ரா, கீர்த்தி ஆசாத் ஆகியோர் இணைந்துள்ளனர்.
கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் நடந்த ஒரு விசாரணையின்போது பேசிய தலைமை நீதிபதி சூர்ய காந்த், ‘கரப்பான்பூச்சிகளைப் போன்ற இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த வேலையும் இருப்பதில்லை; எந்த தொழிலும் செய்வதில்லை. அவர்களில் சிலர் ஊடகவியலாளர்களாகவும், சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்களாகவும், தகவல் அறியும் உரிமை ஆர்வலர்களாகவும் மாறி அனைவரையும் தாக்க தொடங்குகிறார்கள்’ என கூறி இருந்தார்.
‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’
சூர்ய காந்தின் இந்தக் கருத்துக்கு எதிராக சமூக ஊடங்களில் பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில், தலைமை நீதிபதியின் கருத்துக்கு எதிர்வினையாற்றும் நோக்கில், நையாண்டித்தனமாக ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ என்ற பெயரில் ஒரு எக்ஸ் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் பக்கத்தின் சுய விவரம், தலைமை நீதிபதி கூறியதை கேலி செய்வது போல் உள்ளது. அந்தக் கட்சி தன்னை, இளைஞர்களின், இளைஞர்களால், இளைஞர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு அரசியல் முன்னணி என்றும், மதச்சார்பற்ற, சோசலிச, ஜனநாயக சோம்பேறிகளின் கட்சி என்றும் அடையாளப்படுத்திக் கொண்டுள்ளது.
‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’-யில் உறுப்பினராக இணைய தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. வேலையற்றவராக இருக்க வேண்டும், சோம்பேறியாக இருக்க வேண்டும், தொடர்ந்து இணையத்தில் – ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 11 மணி நேரம் – இருக்க வேண்டும். மற்றபடி, சாதி, மதம், பாலினம் ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைந்த பிரபலங்கள்
‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’-யின் எக்ஸ் பக்கம் வேகமாக பிரபலமடைந்து, 24 மணி நேரத்துக்குள் 18,000-க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைப் பெற்றுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் மஹுவா மொய்த்ரா, கீர்த்தி ஆசாத் ஆகியோர் இந்த எக்ஸ் பக்கத்தில் இணைந்துள்ளனர்.

தலைமை நீதிபதி விளக்கம்
தான் கூறிய ‘கரப்பான்பூச்சி’ கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் விளக்கம் அளித்துள்ளார். தனது கருத்துக்கள் நாட்டின் இளைஞர்களை குறிக்கவில்லை என்றும், மாறாக போலிச் சான்றிதழ்களை பயன்படுத்துவர்களை குறிப்பிட்டே கூறப்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
