எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தலைமையில் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
கொண்டாட்டங்களுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ். பாரதி பேசுகையில், “நாளை தொடங்கவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பதைத் தடுக்க வேண்டும் என்ற காழ்ப்புணர்ச்சியோடு, த.வெ.க. அரசு இந்த அராஜகக் கைதை மேற்கொண்டது. நீதிபதி 12 மணி வரை கைது செய்யக் கூடாது என உத்தரவிட்ட நிலையிலும், திமிர்த்தனமாக அவரைப் போலீசார் கைது செய்தனர். இதனால் நீதிமன்றத்தின் கடுமையான கோபத்திற்குத் த.வெ.க. அரசு ஆளாகியுள்ளது.
ஒருவரை விசாரணைக்கு அழைப்பதற்கு இவ்வளவு பெரிய காவல்துறைப் படையைக் குவிக்க வேண்டிய அவசியம் என்ன? சென்னையிலேயே விசாரணை நடத்தியிருக்க முடியும் எனும் போது, அவரை வேண்டுமென்றே தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றதன் பின்னணியில் ஏதோ ஒரு சதித் திட்டம் இருந்தது. ஆனால், தி.மு.க.வின் வலுவான சட்டத்துறையால் அந்தச் சதி முறியடிக்கப்பட்டு, அவர்களின் எண்ணத்தில் மண் விழுந்துள்ளது. உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தி.மு.க.விற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி” எனத் தெரிவித்தார்.
