நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்தும் இருசக்கர வாகனப் பிரச்சாரப் பயணம் மேற்கொள்ள அனுமதி கோரி திராவிடர் கழகம் தாக்கல் செய்த மனுவுக்கு, ஆகஸ்ட் 11-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழகக் காவல்துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திராவிடர் கழகத்தின் இளைஞரணி, மாணவர் கழகம் மற்றும் மகளிர் பாசறை சார்பில், ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 2 வரை தமிழ்நாடு முழுவதும் விழிப்புணர்வு இருசக்கர வாகனப் பிரச்சாரப் பேரணி நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காகக் கடந்த ஜூலை 18 அன்று டிஜிபி அலுவலகத்தில் அனுமதி கோரி மனு அளிக்கப்பட்ட நிலையில், உரியச் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டது.

அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு பேரணி தொடங்க இருந்த சூழலில், ஜூலை 30 அன்று காவல்துறையினரால் திடீரென அனுமதி மறுக்கப்பட்டது. காவல்துறையின் இந்த நடவடிக்கை அரசியல் அமைப்பால் வழங்கப்பட்ட உரிமையைப் பறிக்கும் செயல் எனக் கூறி, அனுமதி மறுப்பு உத்தரவை ரத்து செய்யக் கோரியும், பேரணிக்கு அனுமதி வழங்கக் கோரியும் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், திராவிடர் கழகத்தின் இந்த வழக்க குறித்துத் தமிழகக் காவல்துறை ஆகஸ்ட் 11-ஆம் தேதிக்குள் விரிவான விளக்கம் மற்றும் பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அன்றைய தினத்திற்குத் தள்ளிவைத்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version