காவிரி உரிமை மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் தோல்வியை மறைப்பதற்காகவே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினைத் தமிழக வெற்றி கழக அரசு அராஜகமாகக் கைது செய்துள்ளதாகவும், முதலமைச்சர் விஜய்யின் தொடர்ச்சியான ஆணவப் போக்கு அழிவை விரைவுபடுத்தும் என்றும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ” தஞ்சாவூரில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், காவிரி நீரைப் பெற முடியாத அரசின் கையாலாகாத்தனத்தையும், ‘ஜோக்கர் அமைச்சரவை’ என்றும் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் எழுந்த மக்கள் கொந்தளிப்பையும், அரசின் தோல்வியையும் திசைதிருப்பவே உதயநிதி வீட்டில் வைத்துப் போலீஸாரால் கைது செய்யப்பட்டுத் தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்” எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் அவையில் இருப்பதைத் தடுக்கும் நோக்கிலேயே அச்சுறுத்தும் வகையில் பிணையில் வர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், நீதிமன்ற உத்தரவால் அரசு பின்வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
“நாடு முழுவதும் கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் காட்டிய எதிர்ப்புக்குப் பிறகு, ‘கைது செய்யும் எண்ணம் இல்லை, விசாரணை முடிந்ததும் விடுவித்துவிடுவோம்’ என்று நீதிமன்றத்தில் த.வெ.க. அரசு வழக்கறிஞர் சொல்லி இருக்கிறார். விசாரணை நடத்துவதுதான் நோக்கம் என்றால் சென்னையிலேயே வைத்து நடத்தி இருக்கலாமே? எதற்காக தஞ்சாவூர் அழைத்துச் செல்ல வேண்டும்? எதற்கு ஜாமீனில் விடுவிக்க முடியாத பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்? மக்கள் எதிர்ப்பால் பின் வாங்கியது தெரியாமல் பூசி மெழுகுகிறது அரசு. ‘உதயநிதியை இன்றே விடுதலை செய்ய வேண்டும்’ என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கி இருக்கும் உத்தரவு, த.வெ.க.வின் பாசிசத் தன்மைக்கு விழுந்த அடி!” என்றும் அவர் தனது அறிக்கையில் பதிவிட்டுள்ளார்.
மேலும், உதயநிதி தனது உரையில் யாருடைய பெயரையும் குறிப்பிட்டு ஆபாசமாகப் பேசவில்லை என்றும், தவறான பரப்பரப்புகளைச் சரிபார்க்காமல் சில தலைவர்கள் கண்டனம் தெரிவிப்பது வருத்தமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
த.வெ.க. ஆட்சியில் அமைச்சர்களை விமர்சிப்பவர்கள், நீட் தேர்வுக்கு எதிராகப் போராடும் மாணவர்கள் மற்றும் விவசாயிகள் கைது செய்யப்படுவதைச் சுட்டிக்காட்டி உள்ள மு.க. ஸ்டாலின், ரீல்ஸ் கிரியேட்டராக வலம் வராமல் முதலமைச்சர் விஜய் தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

